Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நியாயம்.. எங்களுக்கு ஒரு நியாயமா.. மனம் வெதும்பிய இலங்கை வீரர்

சிட்னி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற முக்கிய அணிகளுக்கு அதிக போட்டிகளை ஒதுக்கிய நிலையில், இலங்கை அணிக்கு வெறும் 12 போட்டிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடைய உள்ளது. அதன் இறுதி தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஆன இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அந்தத் தொடர் முடிந்த பின் ஜூன் மாதத்தில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும்.

world test championship 2025 angelo mathews sri lanka

அத்துடன் இந்த சுற்று முடிவடைந்து, 2025 - 27 க்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கும். அதற்கான அட்டவணை சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அட்டவணையில் ஆஸ்திரேலியாவுக்கு 22 போட்டிகளும், இங்கிலாந்துக்கு 21 போட்டிகளும், இந்தியாவுக்கு 18 போட்டிகளும், நியூசிலாந்துக்கு 16 போட்டிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மற்ற அணிகளுக்கு 15க்கும் குறைவான போட்டிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. முக்கிய அணியான தென்னாப்பிரிக்காவுக்கு 14 போட்டிகள், பாகிஸ்தானுக்கு 13 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு 12 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஏஞ்சலோ மேத்யூஸ் அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி, அந்த ஆண்டின் மத்தியில் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. அத்துடன் இலங்கை அணிக்கு 2025 ஆம் ஆண்டில் வேறு டெஸ்ட் போட்டிகளே இல்லை.

ஒரு ஆண்டில் வெறும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் இலங்கை அணி விளையாட உள்ளது. இதை சுட்டி காட்டி இருக்கிறார் ஏஞ்சலோ மேத்யூஸ். அவரது அதிருப்திக்கு முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது. மேத்யூஸ் 8000 டெஸ்ட் ரன்களை குவித்து இருக்கிறார். அவருக்கு ஒருநாள் அணியிலும், டி20 அணியிலும் அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

அவரைப் போலவே டிமுத் கருணாரத்னே 7165 ரன்கள் அடித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் தற்போதைய இலங்கை அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டியின் முக்கிய மைல்கல் ஆன 10,000 ரன்களை கடந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். அதற்கு அதிக போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியம் உள்ளது.

ஏஞ்சலோ மேத்யூஸ்-க்கு 37 வயது ஆகிறது. டிமுத் கருணாரத்னேவுக்கு 36 வயது ஆகிறது. 2027 ஆம் ஆண்டின் முடிவில் அவர்கள் இருவரும் ஓய்வு பெறும் நிலையை அடைந்து விடுவார்கள். இந்த நிலையில் வெறும் 12 போட்டிகளில் மட்டுமே ஆடி எப்படி தங்களின் மைல்கல் சாதனையை எட்ட முடியும் என்பது அவர்களின் வேதனை ஆகும்.

இது தனிப்பட்ட சுயநல எண்ணமாக கருத முடியாது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவின் விராட் கோலி ஆகிய நால்வரும் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக அறியப்படுகிறார்கள். அவர்கள் அதிக ரன் குவித்து இருப்பதை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆனால், அதிகப் போட்டிகளில் ஆடினால் தான் மற்ற அணி வீரர்களும் அவர்களைப் போல சாதனை செய்ய முடியும். அதிக போட்டிகளில் விளையாடாமல் போனால் அவர்கள் பேட்டிங் திறமையும் மழுங்கிவிடும். மேத்யூஸ் மற்றும் கருணாரத்னேவுக்கு அதிக வயதாகிறது. எனவே, அவர்களது சாதனையை கூட நாம் ஒதுக்கி விடலாம்.

ஆனால், இலங்கை அணியின் வருங்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் கமிந்து மென்டிஸ்-க்கு 26 வயது ஆகிறது. அவர் இதுவரை 17 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 1110 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 74 என்பதாக உள்ளது. அவர் டான் பிராட்மேனுக்கு இணையான சில சாதனைகளை செய்து இருக்கிறார்.

அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 12 போட்டிகளில் தான் விளையாடப் போகிறார் என்பது எத்தனை பின்னடைவான விஷயமாக இருக்கும். அவர் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அவரது டெஸ்ட் பேட்டிங் திறன் குறையவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு இரண்டு ஆண்டிற்கும் ஒரு முறை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு அணி மற்ற ஆறு அணிகளுடன் விளையாடும் வகையில் அட்டவணையை தயார் செய்கிறது.

அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அவர்களுக்குள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. ஆனால், மற்ற அணிகள் பெரிய அணிகளுடன் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மட்டுமே விளையாடி வருகின்றன. டெஸ்ட் போட்டிகளை நடத்துவதில் நஷ்டம் ஏற்படுவதும் அதற்கு முக்கிய காரணம்.

மேற்கூறிய நான்கு அணிகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் ஓரளவு லாபத்தை ஈட்டுகின்றன. அதிலும் நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பும் சிறிய அணிகளுடன் விளையாடும் டெஸ்ட் தொடர்களில் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை அணிக்கு வெறும் 12 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளது. இந்த மோசமான சூழல் மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Tuesday, January 7, 2025, 20:40 [IST]
Other articles published on Jan 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+