சிட்னி: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன. முன்னதாக முதல் அணியாக தென்னாப்பிரிக்கா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தை பிடிக்க ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வந்தது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இருந்தது ஆஸ்திரேலிய அணி.

அதற்கேற்ப மெல்போர்னில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியிலும், சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தியது. அதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கடந்த இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு முன்னேறி இருந்த இந்தியா முதல் முறையாக முன்னேற தவறியது. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக அந்த கோப்பையை வெல்ல திட்டமிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு முன் தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இல்லை. முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்று இருந்தது. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்று இருந்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கோப்பை வென்றால் மூன்றாவதாக ஒரு அணி அந்த கோப்பையை வெல்லும்.