அடிலெய்டு: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேற என்ன செய்ய வேண்டும்? இந்திய அணி எத்தனை வெற்றிகளை பெற வேண்டும்? மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து இந்திய அணி எத்தனை வெற்றிகளை பெற வேண்டும்? என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அதன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க உள்ள இறுதிப் போட்டிக்கு புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் மட்டுமே தகுதி பெறும். அதற்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் உள்ளன.

முன்னதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியும், இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றியும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்து உள்ளன.
தற்போது இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பெற வேண்டும் என்றால் தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சமாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகளை டிரா செய்ய வேண்டும்.
ஒருவேளை நான்கு போட்டிகளில் வென்று, ஒரு போட்டியை டிரா செய்தாலும் இந்தியா இறுதிக்கு தகுதி பெறும். அதே போல, நான்கு போட்டிகளில் வென்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் அல்லது தொடரின் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ஒருவேளை இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் தோல்வி அடைந்தால் நிலைமை சிக்கலாகி விடும். அப்போது மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை, இந்திய அணி சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இந்திய அணி மூன்று போட்டிகளில் வென்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்து, ஒரு போட்டியில் டிரா செய்தால் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அதே போல, ஆஸ்திரேலிய தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தால், இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட உள்ள தொடரில் ஒரு போட்டியாவது டிரா செய்ய வேண்டும்.
அடுத்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து, ஒரு போட்டியை டிரா செய்தால் தென்னாப்பிரிக்கா அணி, இலங்கையை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்த வேண்டும். அடுத்து இலங்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 1 - 0 என வெல்ல வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இந்திய அணி 3 - 1 என ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது எளிதானது. அதற்கு மேல் அதிக வெற்றிகளை இந்திய அணி பெற்றால் மேலும் எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம். ஆனால், இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தால் இந்திய அணியின் இறுதிப் போட்டி கனவு சிக்கலானதாக மாறிவிடும்.