மெல்போர்ன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இடத்தை இந்திய அணி பிடிப்பதற்கு பாகிஸ்தான் உதவி செய்யக்கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது. இது மட்டும் நடந்தால் தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.
கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என பலரும் நினைத்திருந்த நிலையில், இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 63.33 வெற்றி சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா அணி முதல் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இந்திய அணிக்கு மீதம் உள்ளன. இந்த இரண்டிலும் இந்திய அணி வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
ஆனால், இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை இரண்டு போட்டிகளிலும் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியை பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில், டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்காவின் இறுதிப் போட்டி வாய்ப்பு பறிபோகும். அதன் மூலம், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இது எப்படி நடக்கும்?
தென்னாப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் அந்த அணியின் வெற்றி சதவீதம் 52.78 என்பதாக குறைந்துவிடும். அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் 55.26 என்ற வெற்றி சதவீதத்தை பெற முடியும்.
மறுபுறம் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று, அதன் பின் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என வெற்றி பெற்றால் 57.01 என்ற வெற்றி சதவீதத்தை பெறும்.
இதன் மூலம், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதில் மொத்தம் மூன்று விஷயங்கள் நடைபெற வேண்டும். முதல் விஷயம் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல வேண்டும்.
அடுத்து இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை வெல்ல வேண்டும். ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெல்வதோடு, இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல வேண்டும்.
பாகிஸ்தான் அணியால் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்ய முடியுமா? அதெல்லாம் நடக்கிற கதையா? என சிலர் நினைக்கலாம். ஆனால், பாகிஸ்தான் அணி, ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் 3 - 0 என ஒயிட்வாஷ் செய்து வென்று இருக்கிறது. கடந்த மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 - 1 என வென்று இருக்கிறது.
எனவே, பாகிஸ்தான அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அது போன்ற ஒரு வெற்றியை பெற வாய்ப்பு உள்ளது என்பதாலேயே இந்த ஊகங்கள் கிளம்பி உள்ளன.