பெர்த்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா? என்று இருந்த நிலைமை பெர்த் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என மாறி உள்ளது. இந்தியா அடித்த அடியில் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பு ஆட்டம் கண்டுள்ளது.
மறுபுறம் இந்தியாவின் வெற்றி, இலங்கை அணிக்கு ஜாக்பாட் வாய்ப்பாக மாறி உள்ளது. இதைப் பற்றி விரிவாக பார்ப்போம். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பெர்த் டெஸ்ட் வெற்றிக்கு பின் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 61.1 வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா 57.69 என்ற வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது.

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு எந்த சிக்கலும் இன்றி தகுதி பெற வேண்டும் என்றால் இந்த தொடரில் மீதம் உள்ள நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு புள்ளிப் பட்டியலில் அதிக வெற்றி சதவீதத்துடன் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் மட்டுமே முன்னேறும். இந்தியாவுக்கு அடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ள அணிகள் - ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகும்.
இதில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து வெல்வது கடினம் என்பதால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மிகவும் கடினம்.
அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடையே இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ? அந்த அணிக்கு இறுதி போட்டிக்கான வாய்ப்பு சற்று அதிகரிக்கும். இலங்கைக்கு அதை தவிர்த்து ஆஸ்திரேலியாவுடன் இரண்டு போட்டிகள் உள்ளன.
தற்போது ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதம் உள்ள நான்கு போட்டிகளில், மூன்று தோல்விகளை சந்தித்து, அதன் பின் இலங்கை அணிக்கு எதிராக இலங்கை மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரிலும் தோல்வியடைந்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும். அப்போது இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரிக்கும். இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் ஆகும். சமீப காலமாக இலங்கை அணி சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்து வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு இலங்கை உடனான இரண்டு போட்டிகள் தவிர்த்து பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அந்தப் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகள் முன்னேற அதிக வாய்ப்பு உள்ளன.
பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, அடுத்த நான்கு போட்டிகளில் மூன்றில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டி வாய்ப்பை தக்க வைக்க முடியும். இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 அன்று பகல் - இரவு போட்டியாக நடைபெற உள்ளது.