பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை போட்டி மழையால் டிரா ஆனால் அது 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பை பாதிக்குமா? என்பது பற்றி பார்க்கலாம்.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தற்போது மூன்று அணிகளுக்கு இடையே யார் இறுதிப் போட்டிக்கான இடங்களை பிடிக்கப் போவது என்ற போட்டி உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்த மூன்று அணிகளில் முதல் இரண்டு இடங்களில் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்து உள்ளது.
மூன்றாவது போட்டி மழையால் மொத்தமாக கைவிடப்பட்டு டிரா ஆனது என்றால், இந்த தொடரில் மீதம் உள்ள இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வெல்ல முயற்சிக்க வேண்டும். அப்படி செய்தால் 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும். அப்போது உறுதியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறும்.
ஒருவேளை மூன்றாவது போட்டி டிரா ஆகி, அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரா செய்தால், அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஆன டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும்.
ஒருவேளை இந்திய அணி மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்தால் இலங்கை அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும். எனவே, மூன்றாவது போட்டி டிரா ஆகும் பட்சத்தில் இந்திய அணி நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை வென்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இல்லை எனில் இலங்கை அணியின் வெற்றியை பொறுத்தே இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு அமையும்.