லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கிய ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தென்னாப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்தியது. ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்குமே சாதகமாக தான் இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருந்தனர்.
ஆனால் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இந்த முடிவு சரியாக அமைந்தது. ஏனென்றால் புதிய பந்தை பயன்படுத்தி தென்னாப்பிரிக்கா வீரர்கள் அபாரமாக பந்து வீசினர்.

குறிப்பாக தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா இன்று தன்னுடைய இழந்த மானத்தை காப்பாற்ற வேண்டிய உத்வேகத்தில் களமிறங்கினார். போதை வஸ்து பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகினார். இந்த சூழலில் இதற்கு மன்னிப்பு கேட்ட ரபாடா தற்போது தன்னுடைய பந்து வீச்சு மூலம் சாதிக்க வேண்டும் என்று களம் இறங்கினார்.
ரபாடாவும் 7 அடி உயரம் உள்ள மார்கோ யான்சன் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு நரகத்தை காண்பித்தனர். களத்தில் நின்ற ஒவ்வொரு நொடியும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் சிரமத்தை இருந்தது. குறிப்பாக உஸ்மான் கவாஜா 20 பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் தடுமாறினார். பந்தைத் தொட்டாலே கேட்ச் ஆகி விடும் என்ற அச்சம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இருந்தது.
எனினும் தொடர்ந்து சரியான லயன் மற்றும் பந்தை ஸ்விங் செய்ததால் உஸ்மான் கவஜா 20 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனார். முதல் விக்கெட்டை ரபாடா ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் வீழ்த்தினார். இந்த சூழலில் காயத்திற்கு பின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஆல் ரவுண்டர் கேமரன் கிரீன் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கினார்.
கிரிக்கெட்டில் மூன்று சதம் அடித்ததால் ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது. எனினும் ரபாடா அடுத்த மூன்றாவது பந்தில் கேமரன் கிரீன் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 16 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியில் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மித் களத்திற்கு வந்தார்.
3வது ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியா அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். தொடக்க வீரராக விளையாடிய மார்னஸ் லாபஸ்சென் போராடி 56 பந்துகளை எதிர் கொண்டு 17 ரன்களை சேர்த்தார். மார்னஸ் களத்தில் நிற்கும் வரை அவரால் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. எனினும் ஆபத்துக் காலத்தை கடந்து விட்டோம் என்று மார்னஸ் நினைத்த நிலையில், யான்சன் பந்துவீச்சில் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இந்த கட்டத்தில் தான் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் களத்திற்கு வந்தார். பெரிய போட்டிகளில் பெரிய இன்னிங்ஸ்களில் ரன் சேர்க்கும் டிராவிஸ் ஹெட் இம்முறை வெறும் 13 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். யான்சன் வீசிய பந்தை பின்னால் அடிக்க முற்பட்டபோது தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் அதை அபாரமாக பாய்ந்து பிடித்து ஆட்டம் இழக்க செய்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த கட்டத்தில் தான் ஆல்ரவுண்டர் வெப்ஸ்டர், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். வெப்ஸ்டரும் முதலில் தடுமாறி விளையாடினார். அப்போது தென்னாப்பிரிக்கா வீரர்கள் விக்கெட்டை வீழ்த்தி இருப்பார்கள். ஆனால் வாய்ப்பை நழுவ விட்டனர். பந்து அவரது காலில் பட்டது.
ஆனால் பந்து பேட்டில் இன்சைட் எட்ஜ் ஆகி இருக்கும் என நினைத்து தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா டி ஆர் எஸ் எடுக்காமல் விட்டார். ஒருவேளை அவர் ரிவியூ எடுத்திருந்தால் வெப்ஸ்டர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருப்பார். ஆனால் இந்த வாய்ப்பை வீணடித்ததால் கடைசியில் 72 ரன்களை அவர் குவித்தார். இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி 4 பவுண்டரிகளை அடித்த நிலையில் கேசவ் மகாராஜா பந்து வீச்சில் 23 ரன்கள் எடுத்த நிலையில் கிளீன் போல்ட் ஆனார்.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 192 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போது தேனீர் இடைவேளையில் தென்னாப்பிரிக்கா என்ன மேஜிக் உணவை சாப்பிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. மீண்டும் களத்திற்கு வந்து ஆஸ்திரேலியா அடுத்த 20 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 212 ரன்களில் சுருண்டது.
தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா ஐந்து விக்கெட்டை கைப்பற்றினார். லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது முறையாக ரபாடா இத்தகைய சாதனை செய்திருக்கிறார். இதேபோன்று மார்க்கோ யான்சன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆஸ்திரேலியாவே 212 ரன்கள் தான் இந்த ஆடுகளத்தில் அடித்து இருக்கிறது என்றால் தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் எவ்வாறு இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் நினைத்தனர்.
அதேபோல் தென்னாபிரிக்காவின் பேட்டிங்கும் ஆரம்பத்தில் இருந்து சோக கதையாகவே அமைந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரில் கடைசி பந்திலே மிட்செல் ஸ்டார்க் தன்னுடைய அபாரமான வேகப்பந்து வீச்சால் ஏய்டன் மார்கரமை கிளீன் போல்ட் ஆக்கினார். இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் துள்ளி குதித்தனர். இதனை அடுத்து ரியாண் ரிக்கல்டன் மற்றும் வியான் முல்டர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.
ஆனால் தென்னாப்பிரிக்க வீரர்களை விட ஆஸ்திரேலிய பவுலர்கள் அனுபவம் வாய்ந்தவரதான்.. இதனால் தங்களது அனல் பறக்கும் பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு தூங்கா இரவுகளை ஆஸ்திரேலிய பவுலர்கள் பரிசாக தந்தனர். ஒரு கட்டத்தில் ரியான் ரிக்கல்டன் 23 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதை அடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன்ஸ் ஸ்டப்ஸ் இரண்டு ரன்களில் வெளியேறினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தற்போது கேப்டன் பவுமாவும், டேவிட் பெட்டிங்கமும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். பவுமா மூன்று ரன்னுடனும், டேவிட் பெட்டிங்காம் எட்டு ரன்களும் எடுத்திருக்க முதல்நாள் ஆட்டநேரம் முடிவில் தென்னாபிரிக்க அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருக்கிறது.
இது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 169 ரன்கள் குறைவாகும். தற்போது தென்னாபிரிக்காவின் பேட்டிங் பெரிய அளவு இதற்கு பின் இல்லை. இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோருக்கு அருகில் வந்தாலே அது பெரிய சாதனை தான். தென்னாபிரிக்க அணி இன்று நாள் முழுவதும் விக்கெட் வேட்டை நடத்தி போட்டியில் ஆதிக்கம் செலுத்திய நிலையில் பேட்ஸ்மேன்கள் தற்போது தடுமாறி வருவதால் ஆஸ்திரேலிய அணி மீண்டும் போட்டிக்குள் வந்திருக்கிறது.தென்னாபிரிக்காவின் பேட்டிங்கில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்.