WTC Final- 200 ரன் டார்கெட்டை கூட எடுக்க முடியாது.. தலையில் துண்டை போட்ட தென் ஆப்பிரிக்கா!
லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை விட 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த இலக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
218 ரன்கள் என்பது ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை குறைவான ஸ்கோராகத் தோன்றலாம். ஆனால், லார்ட்ஸ் மைதானத்தின் தன்மை வேறுபட்டது. 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த மைதானத்தில் 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கு நான்கு முறை மட்டுமே எட்டப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு லார்ட்ஸ் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும்.

மேலும், இந்த இறுதிப் போட்டியில் இதுவரை இரண்டு நாள் ஆட்டம் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அதற்குள்ளாக மொத்தம் 28 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. முதல் நாளில் மட்டும் மொத்தம் 14 விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இரண்டாவது நாள் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவது நாள் ஆட்டத்திலும் மொத்தம் 14 விக்கெட்டுகள் பறிபோய் உள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் லார்ட்ஸ் பிட்ச் வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன.
இந்த நிலையில், 218 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை எட்டுவது என்பது தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். மேலும், இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக 212 ரன்களையே எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறி வருகிறது.
எனவே, இந்த ஆட்டத்தின் முதல் மூன்று இன்னிங்ஸ்களிலும் எடுக்கப்பட்ட இன்னிங்ஸ் ஸ்கோர்களை விட அதிக ஸ்கோரை எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை தென் ஆப்பிரிக்காவுக்கு உருவாகியுள்ளது. இந்த சவாலை தென் ஆப்பிரிக்கா அணி ஏற்று வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications