
ஃபைனலுக்கு செல்லும் ரூட்
இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா இரண்டு போட்டிகளில் ஜெயித்தாலே, முதலிடத்துடன் கம்பீரமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதாவது, 2-0, 2-1, 3-0, 4-0, 3-1 என்ற கணக்கில் இந்தியா எப்படி வென்றாலும், இறுதிப் போட்டிக்கு சென்று விடும்.

இங்கிலாந்து கனவு பலிக்குமா?
அதேசமயம், இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற வேண்டுமெனில், மூன்று போட்டிகளில் நிச்சயம் வென்றிருக்க வேண்டும். அதாவது, 3-0, 3-1, 4-0 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து ஜெயித்தால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இந்த ரேஸில் இருந்து வெளியேறிவிடும். ஆனால், இந்திய மண்ணில் இந்தியாவை இவ்வளவு மோசமாக தோற்கடிக்க முடியுமா என்பதே மெகா கேள்வி.

அது சரி... ஆஸி., நிலைமை?
தென்னாப்பிரிக்க தொடரை ரத்து செய்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சிறிய வாய்ப்பிருக்கிறது. இந்தியா - இங்கிலாந்து தொடர் ஒருவேளை 2-2 என்றோ, 0-0 என்றோ டிரா அடைந்தது என்றால், ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல, இந்தியா 1-0 என்று தொடரை ஜெயித்தாலோ, இங்கிலாந்து 1-0, 2-0 அல்லது 2-1 என்று ஜெயித்தாலோ கூட 'அந்த செல்லத்த தூக்கின்னு வாங்கடா' மோடில் ஆஸ்திரேலியா பைனல்ஸ் சென்றுவிடும்.

வெற்றி யாருக்கு?
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஒருபக்கம் மனதில் இருந்தாலும், இரு அணிகளும் முதலில் தொடரை வெல்ல வேண்டும் என்பதில் கவனமாக உள்ளன. இரண்டாம் தர அணியை வைத்துக் கொண்டு ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்று வந்திருக்கும் சூழலில், தற்போது சொந்த மண்ணில், அதுவும் முழு பலத்தோடு களமிறங்கும் போது, இங்கிலாந்து வெற்றிப் பெற வேண்டுமெனில் 'ஏழு கடல், ஏழு மலை' தாண்டியாக வேண்டும்.


Click it and Unblock the Notifications