மும்பை : 2௦23 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணியை முந்தி இருக்கிறது வங்கதேசம்.
கடந்த ஜூன் மாதம் 2021 - 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிவடைந்தது. அதில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஷிப்பை வென்று இருந்தது. அதைத் தொடர்ந்து 2023 ஜூலை முதல் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கி உள்ளது.
அதில் இந்திய அணி இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு தொடரில் மட்டுமே ஆடி உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி மழையால் டிரா ஆனது. அதனால் இந்திய அணிக்கு அப்போது 16 புள்ளிகள் மட்டுமே கிடைத்தன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரை வெற்றி சதவீதமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் ஒரு போட்டி டிரா ஆனதால் இந்தியாவின் வெற்றி சதவீதம் 66.67 ஆக உள்ளது. இது தான் இப்போது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறி உள்ளது.
தற்போது வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் முதல் போட்டியில் வங்கதேசம் தன் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. அதுவும் ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் கொண்ட அணி, நியூசிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றி மூலம் வங்கதேசம் 12 புள்ளிகள் பெற்று, 100 சதவீத வெற்றியை கொண்டு புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 66.67 சதவீத வெற்றியை கொண்டுள்ள இந்திய அணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் இடத்தில் உள்ளது. இலங்கை அணிக் எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்று 24 புள்ளிகளை பெற்று, 100 சதவீத வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளது.
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் என இரண்டு அணிகளும் தற்சமயம் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்மில் தான் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி மழை போன்ற இன்னல்கள் இல்லாமல் இரண்டு போட்டிகளிலும் வென்று விட்டது. ஆனால், இந்திய அணி மழையால் ஒரு போட்டி டிரா ஆகி வெற்றி சதவீதத்தை இழந்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சவாலான தொடர்களில் பங்கேற்க உள்ளது.