உலக கிரிக்கெட்டில் 148 ஆண்டுகளில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை.. கனடா அணிக்கு நேர்ந்த பரிதாபம்
மும்பை: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 148 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மோசமான சாதனையை கனடா கிரிக்கெட் அணி பதிவு செய்துள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 போட்டியில், கனடா அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் இன்னிங்ஸின் முதல் இரண்டு பந்துகளிலேயே ஆட்டமிழந்து, கிரிக்கெட் உலகில் ஒரு மோசமான சாதனையை செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 31, 2025 அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஸ்காட்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பிராட் கியூரி வீசிய முதல் பந்திலேயே கனடாவின் தொடக்க ஆட்டக்காரர் அலி நதீம், முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த மார்க் வாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், கனடா அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே தனது முதல் விக்கெட்டை இழந்தது.

துரதிர்ஷ்ட சாதனை
முதல் பந்தில் விக்கெட் விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அடுத்த பந்தில் கனடா அணிக்கு மேலும் ஒரு பேரிடி காத்துக்கொண்டிருந்தது. நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த யுவராஜ் சம்ரா, ஒரு பந்தைக்கூட சந்திக்காமல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பர்கத் சிங் அடித்த நேர் திசை ஷாட்டை பந்துவீச்சாளர் கியூரி தனது காலால் தட்டிவிட, பந்து நேராக நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த ஸ்டம்பைத் தாக்கியது. இதை சற்றும் எதிர்பாராத யுவராஜ் சம்ரா, கிரீஸை விட்டு வெளியே நின்றிருந்ததால் ரன் அவுட் ஆனார்.
இந்தச் சம்பவம் 148 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் (டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20) இதுவரை நடைபெறாத ஒன்றாகும். ஒரு அணியின் தொடக்க வீரர்கள் இருவரும், இன்னிங்ஸின் முதல் இரண்டு பந்துகளில் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறையாகும்.
கனடா அணியின் ஆட்டம்
இந்த மோசமான தொடக்கத்திற்குப் பிறகு, பிராட் கியூரியின் அனல் பறக்கும் பந்துவீச்சில் கனடா அணி மேலும் சரிவைச் சந்தித்தது. 18 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒரு கட்டத்தில், கனடா அணி 50 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் மொவ்வா தனி ஒருவராகப் போராடி 60 ரன்கள் குவித்தார். கீழ் வரிசை வீரர்களின் உதவியுடன், கனடா அணி 184 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.
ஸ்காட்லாந்தின் அபார வெற்றி
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஜார்ஜ் முன்சே 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். கேப்டன் ரிச்சி பெரிங்டன் 64 ரன்கள் எடுத்து அவருக்குச் சிறந்த ஒத்துழைப்பு அளித்தார். இதன் விளைவாக, ஸ்காட்லாந்து அணி 41.5 ஓவர்களிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications