மகளிர் ஐபிஎல் ஏலம்: எதிர்பாரா ட்விஸ்ட்.. ஸ்மிருதி மந்தனா முதல் சஃபாலி வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்!
மும்பை: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பல கோடிகளில் வீராங்கனைகள் வாங்கப்பட்டு வருவதால் எதிர்பார்ப்பு உச்சகட்டத்திற்கு எகிறியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே மகளிருக்கான ஐபிஎல் தொடர் இந்தாண்டு முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. மார்ச் 4ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இதற்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடந்தது.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கிய ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் களமிறங்குகின்றன.

மகளிர் ஐபிஎல் ஏலம்
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் வரை தேர்வு செய்யலாம் என மொத்தமாக 90 இடங்களுக்கான ஏலமாக இது தொடங்கியது. இதற்காக 246 இந்தியர்கள், 163 வெளிநாட்டினர் என 409 பேர் ஏலம் விடப்படுகின்றனர். ஒவ்வொரு அணியும் ரூ.12 கோடி வரை செலவு செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. முதல் சீசன் ஏலம் என்பதால் குறைந்த விலையில் ஏலம் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அட்டகாசமான தொடக்கம்
ஏலத்தில் முதல் நபராக இந்திய நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனாவுக்கு தான் போட்டி நடந்தது. பெயரை அறிவித்தது முதலே மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் கடுமையாக போட்டிப்போட்டன. ரூ.50 லட்சம் என்ற அடிப்படை தொகையுடன் தொடங்கிய இந்த ஏலம் ரூ.3 கோடியை தாண்டியும் சென்றதால் மற்ற அணிகள் ஏலம் கேட்கக்கூட முன்வரவில்லை. எனினும் இறுதியில் ரூ.3.4 கோடியை கொடுத்து பெங்களூரு அணி வாங்கியது.

டாப் ஏலங்கள்
இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத்திற்கும் பெங்களூரு அணி வலை விரித்தது. முதலில் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் போட்டி போட்டு வந்த சூழலில் இடையில் மும்பை இந்தியன்ஸ் கோடிகளை இறக்க முன்வந்தது. உத்தரபிரதேச அணி ரூ.1.7 கோடி வரை கேட்டுவிட்டு விலகிய சூழலில் மும்பை இந்தியன்ஸ் ரூ.1.8 கோடிக்கெல்லாம் தட்டித்தூக்கியது.

அயல்நாட்டு வீராங்கனை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஃபாலி வெர்மாவை ரூ. 2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. இந்திய நட்சத்திரங்கள் மட்டுமின்றி அயல்நாட்டு வீராங்கனைகளுக்கும் கடுமையான போட்டி நடந்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லெய்க் கார்ட்னரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது. இங்கிலாந்தின் நட்சத்திர வீராங்கனை நடாலி சைஃபர் ரூ.3.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

எகிறிய எதிர்பார்ப்பு
ஒவ்வொரு அணியும் தலா ரூ.12 கோடி வரை தான் செலவு செய்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த குறைந்த தொகைக்குள் ஒரு வீராங்கனைக்காக ரூ.3 கோடி வரை அணிகள் வாரி வழங்குவதால் மகளிர் ஐபிஎல் மீதான கிரிக்கெட் ரசிகர்களின் ஏலம் ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications