WPL 2024 : வரலாறு படைத்த ஆர்சிபி.. டெல்லி கேபிடல்ஸ் செய்த மெகா சொதப்பல்.. ஒரே ஓவரில் மாறிய மேட்ச்
டெல்லி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2024 மகளிர் ஐபிஎல் கோப்பையை வென்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆண்கள் அணி 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி இரண்டாவது ஆண்டிலேயே கோப்பை வென்று வரலாறு படைத்தது.
2024 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் முதல் 7 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி அதிரடி ஆட்டம் ஆடி பெங்களூர் அணியை மிரட்டியது.
ஆனால், எட்டாவது ஓவரில் அந்த அணியின் பெரும் விக்கெட் வீழ்ச்சி துவங்கியது. டெல்லி அணிக்கு துவக்கம் அளித்த ஷபாலி சர்மா 27 பந்துகளில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜெமிமா மற்றும் ஆலிஸ் கேப்சி டக் அவுட் ஆனார்கள்.

அடுத்து முதலில் பேட்டிங் இறங்கிய மெக் லானிங் 23 ரன்கள் எடுத்த நிலையில் 11வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஒருவரும் பெரிதாக ரன் சேர்க்காத நிலையில் 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது டெல்லி கேபிடல்ஸ். பெங்களூர் அணியின் சோஃபி மொளினேக்ஸ் 3 விக்கெட்களும், ஸ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களும், ஆஷா சோபனா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதை அடுத்து இறுதிப் போட்டியில் 114 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாத நிலையில் இந்த முறை வெற்றிகரமாக சேஸிங் செய்து கோப்பையை வென்றது. சிறிய இலக்கு என்றாலும் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் நிதான ஆட்டம் ஆடிய பெங்களூர் அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றது. களத்தில் எல்லிஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் இருந்தனர். கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் ரிச்சா கோஷ் ஃபோர் அடிக்க பெங்களூர் அணி முதன்முறையாக மகளிர் ஐபிஎல் கோப்பை வென்று வரலாறு படைத்தது.


Click it and Unblock the Notifications