WPL 2024 : வெளுத்து கட்டிய ஷஃபாலி .. ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்.. ஆட்டத்தை மாற்றிய ஆர்சிபி பவுலர்!
டெல்லி : மகளிர் பிரிமியர் லீக் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி வீராங்கனை சோஃபி மோலினக்ஸ் ஆட்டத்தை மாற்றியுள்ளார்.
2வது சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது. டெல்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் நேற்றே விற்று தீர்ந்தது. அதுமட்டுமல்லாமல் ஆடவர் ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால் எந்த அணிக்கு முதல்முறையாக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதன்பின் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி தரப்பில் கேப்டன் மெக் லானிங் - ஷஃபாலி வர்மா கூட்டணி களமிறங்கியது. ஆர்சிபி அணி தரப்பில் ரேணுகா சிங் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரிலேயே 9 ரன்கள் விளாசப்பட்ட நிலையில், சோஃபி மொலினக்ஸ் வீசிய 2வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் உடனடியாக எல்லீஸ் பெர்ரி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
இதனால் அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, மீண்டும் ரேணுகா அட்டாக்கில் வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஷஃபாலி வர்மா சிக்ஸ் அடிக்க, தொடர்ந்து கடைசி 2 பந்துகளில் பவுண்டரி அடிக்கப்பட்டது. இதனால் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் விளாசப்பட்டது. பின்னர் எல்லீஸ் பெர்ரி ஓவரிலும் ஷஃபாலி வர்மா பொளந்து கட்ட, டெல்லி அணி 5 ஓவர்கள் முடிவிலேயே 50 ரன்களை கடந்தது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்திருந்தது.
ஆட்டத்தின் கட்டுப்பாட்டை ஆர்சிபி அணி கொஞ்சம் கொஞ்சமாக இழந்திருந்தது. இந்த நிலையில் 8வது ஓவரில் மீண்டும் அட்டாக்கில் வந்த சோஃபி மோலினக்ஸ், தனது முதல் பந்திலேயே ஷஃபாலி வர்மாவை 44 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து வந்த அதிரடி வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் வந்த அலைஸ் கேப்ஸியும் போல்டாகினார். இதன் மூலம் ஒரே ஓவரில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளை சாய்த்து கம்பேக் கொடுத்தது. விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் என்ற நிலையில் இருந்து, ஒரே ஓவரில் 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்தது. இதன் மூலம் தரமான கம்பேக்கை ஆர்சிபி அணி நிகழ்த்தியது.


Click it and Unblock the Notifications