வதோதரா: 2025 மகளிர் ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டி யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி ஆட்டத்துடன் பல்வேறு சாதனைகளை முறியடிக்கும் போட்டியாக அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 37 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். பெத் மூனி 42 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்.

202 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆடியது. இதுவரை மகளிர் ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எந்த அணியும் சேசிங் செய்து வென்றது இல்லை. ஆனால் இந்த இமாலய இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எட்டியது.
அந்த அணியின் எல்லீஸ் பெரி 34 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். ராக்வி பிஸ்ட் நிதானமாக ஆடி 27 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் இருந்த அழுத்தத்தை குறைக்கும் வகையில் ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை ஆடினார். அவர் 27 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். ஏழு ஃபோர் மற்றும் நான்கு சிக்ஸர்களை விளாசி இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 237.04 என்பதாக இருந்தது.
அவருடன் ஜோடி சேர்ந்த கனிகா அகுஜா 13 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 230 என்பதாக இருந்தது. இவர்களின் அதிரடி ஆட்டத்தால் 18.3 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 202 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முறியடிக்கப்பட்ட சாதனைகள் -
இதன் மூலம் மகளிர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் சேஸ் செய்யப்பட்ட சாதனை நிகழ்த்தப்பட்டது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு 191 ரன்கள் என்ற இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற்றிருந்தது. அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது.
மேலும் ஒரு போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையும் இந்த போட்டி படைத்துள்ளது. இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் 391 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு அதே குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் 403 ரன்கள் குவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் போட்டியில் மொத்தமாக 16 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் 19 சிக்ஸர்கள் அடித்ததே அதிகமாக இருந்தது. அதற்கு அடுத்த இடத்தை இந்த போட்டி பிடித்திருக்கிறது.