மும்பை: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வரலாறு படைத்துள்ளது. பலமான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இந்த சீசனில் இரண்டாவது முறையாக வீழ்த்தி, அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு, ஆரம்பத்தில் சோபி டிவைன் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி காத்திருந்தது. ஆனால், கேப்டன் பெத் மூனி வழக்கம் போல் நிதானமாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார். பொறுப்புடன் விளையாடிய அவர் 46 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக அனுஷ்கா சர்மா 25 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார்.

டெல்லி வீராங்கனை ஸ்ரீ சரணி நடுவரிசையில் சிறப்பாகப் பந்துவீசி முக்கிய 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் குஜராத் அணி 131 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், கடைசி நேரத்தில் தனுஜா கன்வர் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 21 ரன்கள் சேர்க்க, குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.
175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் துவக்கம் சிறப்பாக அமையவில்லை. அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா விரைவில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் மிரட்டிய குஜராத் வீராங்கனை சோபி டிவைன், டெல்லி அணியின் முக்கியத் தூண்களான லிசெல்லி லீ மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரை வெளியேற்றினார். இதன் மூலம் சோபி டிவைன் இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
முக்கிய விக்கெட்டுகள் விழுந்ததால் டெல்லி அணி தோல்வியின் விளிம்பிற்குச் சென்றது. ஆனால், நிக்கி பிரசாத் மற்றும் ஸ்னே ரானா ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 7வது விக்கெட்டிற்கு இணைந்த இந்த ஜோடி, யாரும் எதிர்பார்க்காத வகையில் 70 ரன்கள் குவித்து குஜராத் அணிக்கு பயத்தை காட்டியது. இது மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் 7வது விக்கெட்டிற்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
நிக்கி பிரசாத் 47 ரன்களும், ஸ்னே ரானா 29 ரன்களும் குவித்தனர். ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றதால் மைதானத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் பதற்றம் அடையாமல் பந்துவீசிய குஜராத் பந்துவீச்சாளர்கள், டெல்லி அணியைக் கட்டுப்படுத்தினர்.
இறுதியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.