மும்பை: 2026 மகளிர் ஐபிஎல் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஐந்து மகளிர் ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளன. ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்ற முக்கிய இந்திய வீராங்கனைகள் அவரவர் அணிகளால் தக்கவைக்கப்பட்டாலும், பல முன்னணி சர்வதேச மற்றும் இந்திய வீராங்கனைகள் விடுவிக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த 2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நாயகியான தீப்தி சர்மா மற்றும் இறுதிப் போட்டியில் சதம் அடித்த தென்னாப்பிரிக்கக் கேப்டன் லாரா வோல்வார்ட் ஆகியோர் முறையே யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மெக் லேனிங், அலிசா ஹீலி, அமெலியா கெர் போன்ற நட்சத்திரங்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதில் மகளிர் ஐபிஎல் அணிகளால் வெளியேற்றப்பட்ட 10 முக்கிய வீராங்கனைகளை பற்றி பார்க்கலாம்.

யுபி வாரியர்ஸ் அணிக்காக கடந்த மூன்று சீசன்களில் 25 போட்டிகளில் விளையாடி 507 ரன்களும், 27 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் தீப்தி. 2025 சீசனில் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பையில் 'தொடர் நாயகி' விருது வென்ற, உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான தீப்தியை யுபி அணி விடுவித்தது மிகப்பெரிய அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிகபட்ச ரன் குவித்தவர் மெக் லேனிங். 27 போட்டிகளில் 952 ரன்கள் அடித்துள்ளார். தனது அபாரமான கேப்டன்சியின் மூலம், டெல்லி அணியை தொடர்ந்து மூன்று முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான லேனிங்கை அந்த அணி விடுவித்துள்ளது.
2025 மகளிர் உலகக் கோப்பையில் தனது சிறப்பான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்த தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்டை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விடுவித்துள்ளது. குஜராத் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 342 ரன்கள் எடுத்துள்ளார்.
மகளிர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் அமெலியா கெர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 29 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் 437 ரன்கள் குவித்துள்ளார். இவரை மும்பை அணி விடுவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஆஸ்திரேலியக் கேப்டன் அலிசா ஹீலி, யுபி வாரியர்ஸ் அணிக்காக 17 போட்டிகளில் 428 ரன்கள் எடுத்துள்ளார். காயம் காரணமாக 2025 சீசனில் அவர் விளையாடாத நிலையில், தீப்தி சர்மா கேப்டனாகப் பொறுப்பேற்றார். தற்போது அவரையும் யுபி அணி விடுவித்துள்ளது.
இங்கிலாந்தின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சோஃபி எக்லெஸ்டோன், மகளிர் ஐபிஎல் தொடரில் 25 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். யுபி வாரியர்ஸ் அணியின் அதிகபட்ச விக்கெட் வீழ்த்தியவரும், ஒட்டுமொத்த மகளிர் ஐபிஎல் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவருமான இவரையும் அந்த அணி விடுவித்துள்ளது.
இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ரேணுகா தாக்கூரை ஆர்சிபி அணி விடுவித்துள்ளது. 2025 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இவர், மகளிர் ஐபிஎல் தொடரில் 23 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்தின் புகழ்பெற்ற வீராங்கனையான சோஃபி டிவைனையும் ஆர்சிபி அணி தக்கவைக்கவில்லை. ஆர்சிபி அணிக்காக 18 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 402 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 24 போட்டிகளில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி, 295 ரன்களும் எடுத்துள்ளார் ஜெஸ் ஜோனாசென். டெல்லி அணியின் அதிகபட்ச விக்கெட் வீழ்த்தியவர் இவரே. அவரையும் டெல்லி அணி விடுவித்துள்ளது.
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான கிரேஸ் ஹாரிஸ், யுபி வாரியர்ஸ் அணியின் அதிகபட்ச ரன் குவித்தவர் ஆவார். 22 போட்டிகளில் 581 ரன்கள் அடித்ததோடு, 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவரையும் யுபி அணி விடுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.