நவி மும்பை: 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா புதிய வரலாறு படைத்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய அவர், மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வைத்திருந்த நீண்ட கால சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 167 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி அணி துரத்தியது. தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

61 பந்துகளை எதிர்கொண்ட அவர், 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்தார். துரதிர்ஷ்டவசமாக 4 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டாலும், அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதற்கு முன்பு, இந்திய வீராங்கனை ஒருவர் மகளிர் பிரீமியர் லீக்-கில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை ஹர்மன்ப்ரீத் கவுர் வசமே இருந்தது.
2024-ம் ஆண்டு குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் 95 ரன்கள்* எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது 96 ரன்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா அந்தச் சாதனையைத் தகர்த்தெறிந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா (RCB) - 96 ரன்கள் (vs டெல்லி, 2026)
ஹர்மன்ப்ரீத் கவுர் (MI) - 95* ரன்கள் (vs குஜராத், 2024)
தீப்தி சர்மா (UPW) - 88* ரன்கள் (vs குஜராத், 2024)
ஷஃபாலி வர்மா (DC) - 84 ரன்கள் (vs ஆர்சிபி, 2023)
ஸ்மிருதி மந்தனா மட்டுமல்ல, மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் இதுவரை எந்த வீராங்கனையும் சதம் அடித்ததில்லை என்பது ஆச்சரியமான புள்ளிவிவரமாக அமைந்துள்ளது. அதிகபட்சமாக ஆர்சிபி வீராங்கனை சோஃபி டிவைன் (2023) மற்றும் யுபி வாரியர்ஸ் வீராங்கனை ஜார்ஜியா வால் (2025) ஆகியோர் 99 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்து சதத்தைத் தவறவிட்டுள்ளனர்.
அந்தப் பட்டியலில் தற்போது ஸ்மிருதி மந்தனாவும் 96 ரன்களுடன் இணைந்துள்ளார்.