நவி மும்பை: 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த சீசனில் ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது ஆர்சிபி. நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடியால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி இமாலய வெற்றி பெற்றது.
டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட டெல்லி அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. லாரன் பெல் வீசிய முதல் ஓவரிலேயே லிசெல்லி லீ மற்றும் லாரா வோல்வார்ட் என இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் காப் என நட்சத்திர வீராங்கனைகள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இதனால் டெல்லி அணி 10 ரன்களுக்கு 4 விக்கெட் எனவும், பின்னர் 74 ரன்களுக்கு 6 விக்கெட் எனவும் படுமோசமான நிலையில் இருந்தது.

அப்போது தனி ஆளாகப் போராடிய ஷஃபாலி வர்மா, ஆர்சிபி பந்துவீச்சை எதிர்த்துத் தாக்கினார். 41 பந்துகளைச் சந்தித்த அவர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்து அணியை மீட்டெடுத்தார். அறிமுக வீராங்கனை லூசி ஹாமில்டன் 36 ரன்கள் எடுத்து அவருக்குத் துணையாக நின்றார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆர்சிபி தரப்பில் லாரன் பெல் மற்றும் சாயலி சத்காரே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஸ்மிருதி மந்தனா - ஜார்ஜியா வால் கூட்டணி:
167 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, கிரேஸ் ஹாரிஸ் (1 ரன்) ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், அதன் பிறகு இணைந்த கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜார்ஜியா வால் ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. டெல்லி பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, 2-வது விக்கெட்டுக்கு 142 ரன்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்டது.
கேப்டன் ஸ்மிருதி மந்தனா கிளாசிக் ஷாட்கள் மூலம் வானவேடிக்கை காட்டினார். 61 பந்துகளை எதிர்கொண்ட அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 18-வது ஓவரில் லூசி ஹாமில்டனிடம் கேட்ச் கொடுத்து, வெறும் 4 ரன்களில் செஞ்சுரியை தவறவிட்டார். இது மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மறுமுனையில் அபாரமாக ஆடிய ஜார்ஜியா வால் 42 பந்துகளில் 54* ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் ஆர்சிபி அணி 18.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது ஆர்சிபி. டெல்லி அணி 4 போட்டிகளில் 3 தோல்விகளுடன் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஸ்மிருதி மந்தனா தனது அபார ஆட்டத்திற்காக ஆட்டநாயகி விருதை வென்றார். "ஈ சாலா கப் நம்தே" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்சிபியின் இந்த வெற்றிக் கணக்கை கொண்டாடி வருகின்றனர். அடுத்ததாக, நடப்பு சாம்பியன் ஆர்சிபி தனது அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள உள்ளது.