Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL: உபி வாரியர்ஸ் சோலியை முடித்த குஜராத் ஜெயண்ட்ஸ்.. சோபி டிவைன் அரைசதம்.. புள்ளிப்பட்டியல் மாற்றம்

மும்பை: 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தனது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் உ.பி வாரியர்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சோபி டிவைனும், பந்துவீச்சில் ராஜேஸ்வரி கெயிக்வாட்டும் அணியின் வெற்றிக்கு முக்கிய வித்திட்டனர்.

டாஸ் வென்ற உ.பி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும், ஒரு முனையில் கேப்டன் பெத் மூனி நிதானமாக விளையாடி 38 ரன்கள் சேர்த்தார். உ.பி வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் கிராந்தி கவுட் சிறப்பாக பந்துவீசி துவக்கத்திலேயே நெருக்கடி கொடுத்தார்.

WPL 2026 Sophie Devine s Fifty Power Gujarat Giants to a Dominant 45-Run Victory Over UP Warriorz

அணியின் ஸ்கோர் ஒரு கட்டத்தில் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சோபி டிவைன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக ரன் சேர்த்த அவர், கடைசி கட்டத்தில் தனது 'பவர்' ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 42 பந்துகளை சந்தித்த அவர் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் குவிக்க, குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி வாரியர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. துவக்க வீராங்கனை கிரண் நவ்கிரே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அனுபவ வீராங்கனை மெக் லானிங் 14 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி பெரும் நெருக்கடிக்கு ஆளானது. நடுவரிசையில் போப் லிட்ச்பீல்ட் மட்டும் சற்று நேரம் தாக்குப்பிடித்து 32 ரன்கள் சேர்த்தார். அவரைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, உ.பி அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

குஜராத் அணியின் பந்துவீச்சு மிகவும் துல்லியமாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த சுழற்பந்து வீச்சாளர் ராஜேஸ்வரி கெயிக்வாட் தனது தரத்தை மீண்டும் நிரூபித்தார். 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கிய 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். பேட்டிங்கில் கலக்கிய சோபி டிவைன் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதியில் உ.பி வாரியர்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

கடந்த மூன்று போட்டிகளாக தோல்வியை சந்தித்து வந்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு இந்த வெற்றி புது நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 23, 2026, 7:59 [IST]
Other articles published on Jan 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+