மும்பை: WPL 2026 ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்ரீ சரணியை 1.30 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியுள்ளது. 21 வயது வீராங்கனையான இவர், WPL 2026-ல் சுமார் 140 சதவீதம் ஊதிய உயர்வை பெற்றுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டம், எர்ரமலா பள்ளி கிராமத்தில் ஆகஸ்ட் 4, 2004 அன்று பிறந்த ஸ்ரீ சரணி, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முக்கிய வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.
சாதாரண பின்னணியில் இருந்து வந்த இவர், ராயல்சீமா அனல்மின் நிலையம் அருகே தனது மாமா கிஷோர் ரெட்டியின் பகல்நேர ஓய்வின்போது பிளாஸ்டிக் பேட் உடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். பள்ளி கிரிக்கெட், கிளப் கிரிக்கெட்டில் கவனம் ஈர்த்தாலும், பல விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். முன்னாள் தேர்வாளர் பிரசாத்தின் அறிவுரைக்குப் பிறகு தடகளம், கோ-கோ, மற்றும் பேட்மிண்டனில் இருந்து கிரிக்கெட்டிற்கு முழுமையாக மாறினார்.

ஆந்திராவின் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடியதால் அவரது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மெருகேறினார். மார்ச் 2025-ல் நடந்த சீனியர் மகளிர் மல்டி டே சேலஞ்சர் டிராபியில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.டிசம்பர் 2024 மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் 55 லட்சத்திற்கு சரணியை வாங்கியது. அறிமுகமான முதல் போட்டியிலேயே எல்லீஸ் பெர்ரியை அவுட்டாக்கி, தாக்கத்தை ஏற்படுத்தினார்.
WPL-க்கு பிறகு இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்ட் ஸ்பின்னர் என்ற இடத்திற்கு சரணி தேர்வானார்.
ஏப்ரல் 2025-ல் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் ஒருநாள் போட்டிகளில் சரணி அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 12 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தனது முதல் டி20 போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.
இந்த தொடரில் 10 விக்கெட்டுகளுடன் சராசரியாக 14.80 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து தொடரின் சிறந்த வீராங்கனை விருதையும் வென்றார். 18 ஒருநாள் போட்டிகளில், 949 பந்துகள் வீசி 843 ரன்கள் கொடுத்துள்ளார். 5 டி20 போட்டிகளில், 148 பந்துகளில் 119 ரன்கள் கொடுத்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 தொடரில் சரணி 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டும் இல்லாமல் பல முக்கிய இன்னிங்ஸ்களை விளையாடி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் தான் தற்போது ஏலத்தில் அதிக விலைக்கு சென்றார்.