உலக நம்பர் 1 வீராங்கனைக்கு அதிர்ச்சி.. WTA ஃபைனல்ஸ் பட்டத்தை வென்ற எலெனா ரைபகினா.. வரலாற்று சாதனை
ரியாத்: டென்னிஸ் உலகின் மதிப்புமிக்க WTA ஃபைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலெங்காவை வீழ்த்தி, கஜகஸ்தானின் எலெனா ரைபகினா தனது முதல் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். ரியாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-3, 7-6 (7-0) என்ற நேர் செட் கணக்கில் ரைபகினா அபார வெற்றி பெற்றார்.
தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அவர் இந்தக் கோப்பையைக் கைப்பற்றியது மேலும் ஒரு சிறப்பாகும். இந்த வெற்றியின் மூலம், WTA ஃபைனல்ஸ் பட்டத்தை வென்ற முதல் கஜகஸ்தான் வீராங்கனை என்ற சரித்திர சாதனையை ரைபகினா நிகழ்த்தியுள்ளார்.

ரைபகினாவின் முழுமையான ஆதிக்கம்
இந்த இறுதிப் போட்டியின் தொடக்கத்திலிருந்தே ரைபகினா தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினார். முதல் செட்டின் ஆரம்பத்திலேயே சபலெங்காவின் சர்வீஸை பிரேக் செய்த அவர், தனது 'கிரவுண்ட்ஸ்ட்ரோக்ஸ்' மற்றும் துல்லியமான சர்வீஸ்கள் மூலம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்.
சபலெங்கா இரண்டாவது செட்டில் மீண்டு வர கடுமையாகப் போராடினார். தனது சர்வீஸ்களைக் காப்பாற்றி, போட்டியை டை-பிரேக்கர் வரை கொண்டு சென்றார். ஆனால், டை-பிரேக்கரில் தனது நிதானத்தை இழக்காத ரைபகினா, ஒரு புள்ளியைக் கூட விட்டுக்கொடுக்காமல் 7-0 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றி, போட்டியையும், பட்டத்தையும் வென்றார். சபலெங்கா தரவரிசையில் முன்னிலையில் இருக்கிறார். இதற்கு முன் ரைபகினாவை வீழ்த்தி இருக்கிறார். ஆனாலும், இறுதிப் போட்டியில் ரைபகினாவின் சிறப்பான சர்வீஸும், உறுதியான ஆட்டமும் வெற்றியைத் தேடித் தந்தது.
சரித்திர சாதனையும், கோடிகளில் பரிசுத் தொகையும்
இந்த வெற்றி ரைபகினாவின் 11வது WTA ஒற்றையர் பட்டமாகும். மேலும், இதுவே அவரது முதல் WTA ஃபைனல்ஸ் பட்டமாகும். இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம், டென்னிஸ் உலகின் மிகப்பெரிய பரிசுத் தொகைகளில் ஒன்றான, சுமார் 5.235 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ₹43 கோடி) அவர் தட்டிச் சென்றார்.
ரைபகினாவின் இந்த வெற்றி, அவரை டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனைகள் பட்டியலில் உச்சத்தில் நிலைநிறுத்தியுள்ளது. இனிவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் ஒரு சவாலான போட்டியாளராகக் கருதப்படுவார் என்பதை இந்த வெற்றி உரக்கச் சொல்லியிருக்கிறது.


Click it and Unblock the Notifications