இவர் மட்டும் விளையாடினால் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் கோப்பை வெல்வது உறுதி.. 9 பைனல் வென்ற ஹேசல்வுட்
லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 அன்று நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோத உள்ள நிலையில், இதில் ஜோஷ் ஹேசல்வுட் விளையாடினால் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் ஜோஷ் ஹேசல்வுட் மிகவும் திறமையான பந்துவீச்சாளர். எதிரணியை அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் என்பது மட்டுமில்லாமல், அதிர்ஷ்டம் வாய்ந்த வீரராகவும் இருக்கிறார். இதுவரை அவர் எந்த ஒரு இறுதிப் போட்டியில் விளையாடினாலும், அவரது அணி வெற்றி பெற்றுள்ளது.

இது சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அண்டர் 19, டி20 தொடர்கள் என எந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஹேசல்வுட் விளையாடினாலும் அவரது அணி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் மொத்தம் ஒன்பது இறுதிப் போட்டிகளில் அவர் விளையாடியிருக்கிறார். அந்த ஒன்பது இறுதிப் போட்டிகளிலும் அவர் விளையாடிய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஹேசல்வுட் விளையாடி வெற்றி பெற்ற அந்த ஒன்பது இறுதிப் போட்டிகளும் என்னென்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்:
- 2010 அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வென்றது.
- 2012 சாம்பியன்ஸ் லீக் டி20 இறுதிப் போட்டி: சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஹேசல்வுட் இடம்பெற்றிருந்தார். அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2015 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை வீழ்த்தியது.
- 2020 பிக் பாஷ் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டி: ஹேசல்வுட் இடம்பெற்றிருந்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெற்றி பெற்றது.
- 2021 ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹேசல்வுட் இடம்பெற்றிருந்தார். அந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
- 2021 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது.
- 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தியிருந்தது.
- 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி இருந்தது.
- 2025 ஐபிஎல் இறுதிப் போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஹேசல்வுட் இடம்பெற்றிருந்தார். அந்த அணியே ஐபிஎல் கோப்பையை வென்றது.
இந்த நிலையில், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ஹேசல்வுட் விளையாடினால், ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications