“தலை வணங்குகிறோம்”.. தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா செயலால் வாயடைத்துப் போன கிரிக்கெட் ரசிகர்கள்
லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா ஆடிய ஆட்டத்தை கண்டு உலகமே வியந்து போயுள்ளது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, டெம்பா பவுமாவிற்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் சரியாக ஃபீல்டிங் செய்ய முடியாத நிலை இருந்தது. அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அவரால் எப்படி பேட்டிங் செய்ய முடியும் எனப் பலரும் சந்தேகித்தனர். மேலும், ஆஸ்திரேலியா அணி 282 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்திருந்தது. இந்தப் போட்டி நடைபெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் 200 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதே சிரமம் என்ற நிலையில், தென்னாப்பிரிக்க அணி சேஸிங் செய்யத் துவங்கியது.

அந்த அணியின் துவக்க வீரர் ரியான் ரெகல்டன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். வியான் முல்டர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மற்றொரு துவக்க வீரர் எய்டன் மார்க்ரமுடன் இணைந்து டெம்பா பவுமா பேட்டிங் செய்தார். காலில் கடும் வலி இருந்தாலும், அதனுடன் டெம்பா பவுமா ரன்கள் ஓடினார். அதிலும் பல சமயம் அவர் இரண்டு ரன்களை ஓட வேண்டி இருந்தது.
அவ்வப்போது பிசியோதெரபிஸ்ட்டை அழைத்து முதலுதவி செய்து கொண்டே விளையாடினார் பவுமா. அவர் விரைவில் ஆட்டமிழந்து விடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் அரை சதத்தைக் கடந்தார். மறுபுறம் மார்க்ரம் சதம் அடித்தார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி மூன்றாவது நாளின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி இலக்கை கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட தென்னாப்பிரிக்க அணிக்கு இன்னும் 69 ரன்கள் எடுத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது. எய்டன் மார்க்ரம் 102 ரன்களுடனும், டெம்பா பவுமா 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த ஆட்டத்தை அடுத்து டெம்பா பவுமாவிற்கு கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அவர் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்காத கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். தற்போது அவரது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பேட்டிங் அவரை ஜாம்பவானாக உயர்த்தி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், டெம்பா பவுமா தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications