லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய தொடர்களின் இறுதிப் போட்டிகளில் இதுவரை 15 வீரர்கள் சதம் அடித்துள்ளனர். இதில், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்கிரம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி சதம் அடித்து இந்த பட்டியலில் 15வது வீரராக இடம்பிடித்துள்ளார். ஐசிசி இறுதிப் போட்டிகளில் சதம் அடித்த வீரர்களின் முழு பட்டியலை இப்போது பார்க்கலாம்.
1. கிளைவ் லாய்ட் (மேற்கிந்தியத் தீவுகள்) - 1975 ஒருநாள் உலகக் கோப்பை
1975 ஆம் ஆண்டு நடந்த முதல் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கிளைவ் லாய்ட் 85 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து, ஐசிசி இறுதிப் போட்டிகளில் அடிக்கப்பட்ட முதல் சதத்தை பதிவு செய்தார்.

2. விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) - 1979 ஒருநாள் உலகக் கோப்பை
1979 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக 138 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
3. அரவிந்த டி சில்வா (இலங்கை) - 1996 ஒருநாள் உலகக் கோப்பை
1996 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அரவிந்த டி சில்வா 107 ரன்கள் எடுத்து, இலங்கையின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்டார்.
4. ஃபில்லோ வாலஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) - 1998 ஐசிசி நாக் அவுட் டிராபி
1998 ஐசிசி நாக் அவுட் டிராபி இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஃபில்லோ வாலஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 103 ரன்கள் அடித்து சதம் பதிவு செய்தார்.
5. கிறிஸ் கெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து) - 2000 ஐசிசி நாக் அவுட் டிராபி
2000 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி நாக்அவுட் தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் 130 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார்.
6. சௌரவ் கங்குலி (இந்தியா) - 2000 ஐசிசி நாக் அவுட் டிராபி
அதே 2000 ஆம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக சௌரவ் கங்குலி 117 ரன்கள் எடுத்தார். இந்திய அணி இதுவரை 14 ஐசிசி இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் சௌரவ் கங்குலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.
7. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 2003 ஒருநாள் உலகக் கோப்பை
2003 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக சதம் விளாசினார்.
8. மார்கஸ் டிரெஸ்கோதிக் (இங்கிலாந்து) - 2004 சாம்பியன்ஸ் டிராபி
இங்கிலாந்து வீரர் மார்கஸ் டிரெஸ்கோதிக், 2004 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சதம் அடித்தார்.
9. ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) - 2007 ஒருநாள் உலகக் கோப்பை
2007 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஆடம் கில்கிறிஸ்ட் அதிரடியாக 149 ரன்கள் எடுத்தார்.
10. ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - 2009 சாம்பியன்ஸ் டிராபி
ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், 2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 105 ரன்கள் எடுத்தார்.
11. மகேலா ஜெயவர்தனே (இலங்கை) - 2011 ஒருநாள் உலகக் கோப்பை
இலங்கை அணியின் மகேலா ஜெயவர்தனே, இந்திய அணிக்கு எதிராக நடந்த 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 103 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
12. ஃபகர் ஸமான் (பாகிஸ்தான்) - 2017 சாம்பியன்ஸ் டிராபி
பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஸமான், 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 114 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
13. டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) - 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் எடுத்தார். ஐசிசி இறுதிப் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரரும் இவர் மட்டுமே.
14. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
அதே 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 137 ரன்கள் எடுத்தார்.
15. டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) - 2023 ஒருநாள் உலகக் கோப்பை
2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு மீண்டும் ஒருமுறை காரணமாக இருந்தார். இந்த சதம் மூலம் ஐசிசி இறுதிப் போட்டிகளில் இரண்டு முறை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார் ஹெட்.
16. எய்டன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்த பட்டியலில் 16வது சதமாகவும், 15வது வீரராகவும் எய்டன் மார்க்ரம் இடம்பிடித்திருக்கிறார். அவர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நான்காவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.