WTC Final 2025: வேற லெவல் ஆட்டம்.. தென்னாப்பிரிக்க வீரர் மார்க்கரம் அபார சதம்.. பதற்றத்தில் ஆஸி
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஏய்டன் மார்க்கரம், கடைசி இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இதன் மூலம் ஒட்டுமொத்த தென்னாபிரிக்க ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தன்னுடைய பேட்டிங் மூலம் அவர் நிறைவேற்றி வருகிறார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கடுமையாக தடுமாறினர்.

அதிகபட்சமாக டேவிட் பெட்டிங்காம் மட்டும் 45 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது இன்னிங்ஸில் கடுமையாக தடுமாறியது.
அந்த அணியில் அலெக்ஸ் கெரி 43 ரன்கள் எடுக்க இறுதி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தட்டு தடுமாறி இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 280 ரன்கள் மேல் இதுவரை இரண்டே இரண்டு முறை தான் கடைசி இன்னிங்ஸில் வெற்றிகரமாக இலக்கு எட்டப்பட்டு இருக்கிறது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தடுமாறும் என்று ரசிகர்கள் நினைத்தபோது தொடக்க வீரர் ஏய்டன் மார்க்கரம் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கின்றார்.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு மும்மூர்த்திகளான பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் பந்துகளை கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் லாவகமாக மார்க்கரம் எதிர்கொண்டார். 69 பந்துகளில் அரை சதம் அடித்த மார்க்கரம் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி 156 பந்துகளில் சதம் அடித்தார்.
இதில் 11 பவுண்டரிகள் அடங்கும், ஆஸ்திரேலியாவின் வெற்றி கனவுக்கு தற்போது எய்டன் மார்க்கரம் ஒரு தடையாக விளங்கி வருகின்றார்.தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்படும் நிலையில், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு எட்டு விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இதனால் காற்று தென்னாப்பிரிக்கா பக்கம் வீச தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications