லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுமா, இன்னும் எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும், ஆஸ்திரேலியா கடைசி நேரத்தில் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன. அதன் பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 207 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

முதல் மூன்று இன்னிங்ஸ்களிலுமே இரண்டு அணிகளும் பெரிய அளவில் ரன் குவிக்காததால், நான்காவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 282 ரன்கள் எடுப்பது கடினம் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. ஆனால், தற்போது மூன்றாவது நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு மிக அருகே இருந்தாலும், ஆஸ்திரேலியா இந்த போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த ஆட்டத்தின் முதல் இரண்டு நாட்களில் வானம் மேகமூட்டமாக இருந்ததால் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அப்போது ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். தென்னாப்பிரிக்க அணியை வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.
ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது இன்னிங்ஸில் 73 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்தது. பின்னர் மூன்றாவது நாளன்று வெயிலின் காரணமாக பிட்ச்சின் தன்மை மாறியது. அதனால்தான் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 207 ரன்கள் சேர்த்தது.
அதே போல தென்னாப்பிரிக்க அணியும் மூன்றாவது நாளன்று எளிதாக ரன் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் போன்ற தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
ஆனால், நான்காவது நாள் அன்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, பிட்ச்சில் சிறிய மாற்றம் இருந்தாலும் நிலைமை மாறலாம். ஏனெனில், ஆஸ்திரேலியாவின் இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் மிகவும் திறமையானவர்கள். அவர்களால் 69 ரன்களை தென்னாப்பிரிக்கா எடுப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும்.
தென்னாப்பிரிக்கா அணியைப் பொருத்தவரை, தற்போது எய்டன் மார்க்ரம் சதம் அடித்த நிலையிலும், டெம்பா பவுமா அரை சதம் அடித்த நிலையிலும் ஆடுகளத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் நான்காவது நாளில் தங்களது விக்கெட்டை முதல் 10 ஓவர்களுக்குள் இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதுதான் மிகவும் முக்கியமான கட்டமாக இருக்கும். அப்போது விக்கெட்டுகள் விழுந்தால், அடுத்து வரும் தென்னாப்பிரிக்க வீரர்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்துவார்கள். எனவே, முதல் 10 ஓவர்கள் இந்த ஆட்டத்தில் முக்கியமானதாக இருக்கும். அந்த முதல் 10 ஓவர்களில் 20 முதல் 30 ரன்கள் எடுத்துவிட்டால், ஆஸ்திரேலிய அணி நிச்சயம் நம்பிக்கை இழந்துவிடும். இதுவே தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
ஒருவேளை தென்னாப்பிரிக்க அணி விக்கெட்டுகளை இழந்தாலும், அதன் பிறகு பதற்றம் அடையாமல் நிதானமாக ரன் குவிக்க வேண்டும். ஏனெனில், இன்னும் 69 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால், மிகவும் நிதானமாக எடுத்தால் கூட 25 அல்லது 30 ஓவர்களில் அதை எடுத்து விடலாம். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் இருப்பதால், தென்னாப்பிரிக்க அணிக்கு ஓவர்கள் குறித்து அழுத்தம் இருக்காது. விக்கெட் வீழ்ச்சி அழுத்தம் மட்டுமே ஏற்படக் கூடும். அதை சமாளித்தால் போதும், தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று விடும்.