லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் ஐசிசி உலக கோப்பையை தென்னாப்பிரிக்க சீனியர் அணி முதல் முறையாக வென்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி செலுத்தி வந்த ஆதிக்கம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
தென்ஆப்பிரிக்கா 1992 ஆம் ஆண்டு மறு வருகைக்குப் பின் இதுவரை பல ஐசிசி தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முக்கியமான போட்டிகளில் சொதப்பி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டு இருக்கிறார்கள்.

தற்போது அதற்கு ஒரு முடிவு கட்டப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட்டில் மெக்காஹ் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பேட்டிங் செய்தனர்.
முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்க வீரர்கள் அபாரமாக பந்து வீசினர். குறிப்பாக ரபாடா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனினும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் 66 ரன்களும், வெப்ஸ்டர் 72 ரன்களும் எடுக்க அந்த அணி முதல் இன்னிங்சில் 212 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அப்போது ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த சூழலில் 74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அப்போது தென்னாப்பிரிக்க வீரர்கள் தங்களுடைய போராட்ட குணத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டை வேட்டையாடினர். ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 73 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் அந்த அணியின் ஸ்டார்க் இறுதி கட்டத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுக்க அலெக்ஸ் காரி 43 ரன்கள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த சூழலில் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 6 ரன்களில் பெவிலியன் திரும்ப தென்னாப்பிரிக்கா அணியின் தோல்வி ஆரம்பம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போதுதான் தொடக்க வீரர் ஏய்டன் மார்க்கரம் தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை வெளிப்படுத்தினார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய வியான் முல்டர் ஐந்து பவுண்டரிகளை அடித்து 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். தென்னாபிரிக்க அணி 70 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தபோது, கேப்டன் பவுமா, ஏய்டன் மார்க்கரம் ஜோடி சேர்ந்து தென்னாப்பிரிக்க அணியை வெற்றிக்கு வழி வகுத்தனர்.
சிறப்பாக விளையாடிய பவுமா 66 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது.மறுமுனையில் சிறப்பாக விளையாடிய மார்க்கரம் 156 பந்துகளில் சதம் விளாசினார். இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு 69 ரன்கள் என்ற நிலையில் தொடர்ந்தது. இதில் எய்டன் மார்க்கரம் 136 ரன்கள் குவித்தார்.
தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி ரன்களை அவர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றிக்கு 6 ரன்கள் இருக்கும்போது தன்னுடைய விக்கெட்டை அவர் பறி கொடுத்தார். இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பார்த்து, பவுமா கண்ணீர் சிந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கடைசியாக தென்னாப்பிரிக்க அணி 1998ஆம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றது. ஆனால் , உலக கோப்பை இது தான் முதல் முறை