லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியும், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணியும் பலப் பரீட்சை நடத்துகிறது.
இதுவரை தென்னாபிரிக்க அணி ஒரு முறை கூட உலக கோப்பையை வென்றது கிடையாது. இந்த சோகமான சாதனையை மாற்ற வேண்டிய உத்வேகத்தில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா களமிறங்குகிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பலமானதாக இருந்தாலும்,பேட்டிங்கில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மார்னஸ் லாபசேன் முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்குகிறார். அவர் எவ்வாறு கவாஜா உடன் சேர்ந்து விளையாட போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
இதே போன்று காயத்திலிருந்து மீண்டும் வந்திருக்கும் ஆல்ரவுண்டர் கேமரன் கிரீம் வெறும் பேட்ஸ்மேனாக மூன்றாவது வீரராக களமிறங்குகிறார். இதனால் டாப் 3 வீரர்கள் விரைவில் வீழ்த்தினால் அது ஆஸ்திரேலியாவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாட் கம்மின்ஸ், கேமரன் கிரீன் நல்ல ஃபார்மில் இருக்கின்றார்.
இதனால் தான் அவருக்கு பேட்டிங் வரிசையில் இடம் கிடைத்தது. இதனால் மூன்றாவது வீரர் என்ற இடம் அவருக்கு சரியானதாக இருக்கும் என்று நினைத்தேன். லாபஸ்சேன் இதன் காரணமாக ஓரு இடம் முன்னேறி தொடக்க வீரராக களமிறங்குகிறார். மூன்றாவது இடத்திற்கும் முதல் இரண்டு இடத்திற்கும் பேட்டிங் வரிசையில் பெரிய வித்தியாசம் இருக்காது என்று நினைக்கின்றேன் என கம்மின்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாபிரிக்க அணி கேப்டன் பவுமா, ஆஸ்திரேலிய அணியின் டாப் 3 வீரர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அங்கு தென்னாப்பிரிக்க அணிக்கு விக்கெட் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இங்கிலாந்து ஆடுகளம் முதலில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பந்தை நன்றாக ஸ்விங் செய்தால் நிச்சயம் எங்களுக்கு விக்கெட் எடுக்க வாய்ப்பு கிடைக்கும்.
ஏனென்றால் இது ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் மற்றும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறினார். எங்கள் இரண்டு அணியிலும் நல்ல வேகப்பந்து வீச்சு படை இருப்பதால் எந்த பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்களை வெற்றி பெறுவார்கள் என்று பவுமா கூறியுள்ளார்.