லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வீரர் ரபாடா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதை சுட்டிக்காட்டி கேப்டன் பவுமா இந்த முடிவை எடுத்ததாக கூறினார். எனினும் இதுக்கு மறுப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோர் களமிறங்கினர். இதில் கவாஜா தொடர்ந்து தடுமாறி வந்தார். மறுமுனையில் லாபஸ்சேன், தனது பேட்டிங் யுத்தியால் தப்பித்து வந்தார்.
இந்த நிலையில் ஆட்டத்தின் ஏழாவது ஓவரை வீசிய தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா மூன்றாவது பந்தில் உஸ்மான் கவாஜாவின் விக்கெட் டக் அவுட் ஆக்கினார். இதனை அடுத்து அதே ஓவரில் ஆறாவது பந்தில் அதிரடி வீரர் கேமரன் கிரீன் விக்கெட்டை வீழ்த்தினார். இதில் கேமரன் கிரீன் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 16 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது.
ஆஸ்திரேலியா அணியை முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோரில் தென்னாபிரிக்கா வீழ்த்தினால், அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரமாதமாக இருக்கும். இதனால் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த தென்னாப்பிரிக்கா வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ரபாடா போதை வஸ்துகளை பயன்படுத்தியதாக அவர் மீது கடந்த மாதம் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த சூழலில் தமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தி ரசிகர்களின் மனதை வெல்ல முயற்சி செய்து வருகிறார்.