லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தற்போது விறுவிறுப்பான கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடைசி இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற 282 ரன்கள் அடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் பலரும் ஆஸ்திரேலியா மூன்றாவது நாள் தேநீர் இடைவெளியிலே போட்டியை முடித்து விடும். தென்னாப்பிரிக்காவின் 10 விக்கெட்டுகளை 100 ரன்களில் சுருட்டி விடும் என்று பல ரசிகர்களும் கணக்கு போட்டார்கள்.
ஆனால் அந்த கணக்கு எல்லாம் சுக்கு நூறாக உடைத்து அசத்தி இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஏய்டன் மார்க்கரம் தன் வாழ்நாளில் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடி இருக்கிறார்.

எனினும் அவருடைய பணி இன்னும் முடியவில்லை. 144 ரன்கள் 8 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அப்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை விட 200 ரன்களுக்கு மேல் இருந்த நிலையில், கடைசி இரண்டு விக்கெட்டுகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
குறிப்பாக மிட்செல் ஸ்டார்க் ஒரு சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்ட ஸ்டார்க் 136 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஹேசல்வுட் 17 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 65 ஓவர் முடிவில் 207 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலே தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 6 ரன்களின் ஆட்டம் இழக்க, ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியில் குதித்தனர். ஆனால் அவர்களுடைய மகிழ்ச்சி நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை.
ஆடுகளமும் கொஞ்சம் கை கொடுக்க எய்டன் மார்க்கரம் மற்றும் வியான் முல்டர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குறிப்பாக ரியான் முல்டர் ஐந்து பவுண்டரிகள் அடித்து 50 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். எனினும் ஸ்டார்க் பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஏய்டன் மார்க்கரம் கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் ஏதோ ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது போல் பவுண்டரிளை விரட்டினார்.
இதனால் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் பவுமா, தன்னுடைய வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸை இன்று வெளிப்படுத்தினார். கொஞ்சம் கூட பயமே இல்லாமல் கூலாக களத்தில் ரன்களை சேர்த்தார். பவுமா 83 பந்துகளில் அரை சதம் அடிக்க சிறப்பாக விளையாடிய எய்டன் மார்க்கரம் 156 பந்துகளில் சதாம் விளாசினார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர் 143 ரன்கள் சேர்த்தனர். தற்போது தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு வெறும் 69 ரன்கள் தான் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இன்னும் எட்டு விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். தற்போது தென்னாபிரிக்க அணி வெற்றியின் கதவு வரை வந்துவிட்டது. கடைசி வரை விக்கெட்டுகள் விழாமல் நின்று ஏய்டன் மார்க்கரம் விளையாடி சாதனை வெற்றியை பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுவரை தென்னாபிரிக்க சீனியர் அணி ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றதில்லை. இந்த வரலாற்றை பவுமா தலைமையிலான அணி மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.