மும்பை: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. . இந்தப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல முனைப்புடன் உள்ளது, அதேவேளையில் தென்னாப்பிரிக்கா அணி வரலாற்று சாதனை படைக்கும் உற்சாகத்துடன் களமிறங்குகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் போட்டியைப் பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். "ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய ஆயுதம் பாட் கம்மின்ஸ். அவர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார். அவரது கேப்டன்ஷி பந்துவீச்சு, மற்றும் கீழ் வரிசையில் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்கும் திறன் ஆகியவை அவரை மூன்று துறைகளிலும் தனித்து நிற்க வைக்கின்றன," என்று அவர் கூறினார்.
"கம்மின்ஸ் எப்போதும் அணியை முன்னின்று வழிநடத்தி, எதிரணியை அழுத்தத்தில் வைத்திருப்பார்," என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய மற்றொரு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், "கம்மின்ஸ் அணியை ஒருங்கிணைக்கும் தலைவர்களில் ஒருவர். அவர் ஒரு மேட்ச் வின்னர் என்பதை பலமுறை நிரூபித்தவர். ஒரு கேப்டனை அணி மதிக்கும்போது, அவருக்குப் பின்னால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவர்," என்று கூறினார்.
"இந்தப் போட்டியில் நாதன் லயன் மிகவும் அபாயகரமான வீரராக இருப்பார். தென்னாப்பிரிக்க வீரர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் சற்று பலவீனமாக உள்ளனர். லயன் ஒரு சாம்பியன் பவுலர். அவருக்கு மைதான நிலைமைகள் ஒரு பொருட்டல்ல. மேலும், டிராவிஸ் ஹெட் வேகமாக ரன்கள் சேர்த்தால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை உறுதி செய்யக்கூடிய முக்கிய வீரராக இருப்பார். இதனால் அவருடைய விக்கெட்டை விரைவில் கைப்பற்ற வேண்டும்" என்று ஹர்பஜன் எச்சரித்தார்.
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து மைதானங்களில் ஆசஸ் தொடர் மற்றும் முந்தைய WTC இறுதிப் போட்டி ஆகியவற்றில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருப்பதாக ஹர்பஜன் குறிப்பிட்டார். "தென்னாப்பிரிக்காவை விட ஆஸ்திரேலியாவுக்கு இந்த மைதான நிலைமைகள் நன்கு தெரிந்தவை. அவர்கள் ஒரு சாம்பியன் அணி, பெரிய போட்டிகளில் அழுத்தத்தை கையாள்வதில் வல்லவர்கள். அதனால்தான் அவர்கள் மற்ற அணிகளை விட அதிக கோப்பைகளை வென்றுள்ளனர்," என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.