உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மாற்றம்.. இனி 9 அணிகள் மட்டும் இல்லை.. சிறிய அணிகளுக்கும் வாய்ப்பு
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 9 முன்னணி அணிகள் மட்டுமே விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்த முக்கிய தொடரை 12 அணிகளாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2027 சீசனில் இருந்து ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய 3 புதிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இரண்டு நிலைகளாக பிரித்து நடத்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் திட்டத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. ஆஸ்திரேலியாவின் திட்டத்தின்படி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகள் முதல் நிலையிலும், மற்ற சிறிய அணிகள் 2வது நிலையிலும் விளையாட வேண்டி இருக்கும். இதனால் சிறிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு கிடைக்கும் வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் என்பதோடு, பெரிய அணிகளுடன் விளையாடும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்காது.

இதன் காரணமாகவே அனைவரையும் உள்ளடக்கிய தொடராக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 3 அணிகள் சேர்க்கப்படுவதன் மூலம், அவர்கள் அனைத்து முன்னணி அணிகளுடனும் விளையாடும் சமமான வாய்ப்பு கிடைக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை உலகளவில் மேலும் பிரபலப்படுத்த இது உதவும். இந்த 12 அணிகள் திட்டத்திற்கு நிர்வாக குழு ஏற்கனவே பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், சிறிய அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளை நடத்த கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நடப்பு 2026 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 87.50 சதவீத வெற்றிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நியூசிலாந்து அணி 77.78 சதவீத வெற்றிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. 9 அணிகள் மட்டுமே பங்கேற்கும் கடைசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக இது அமைய அதிக வாய்ப்புள்ளது. அடுத்த சீசனில் இருந்து 12 அணிகள் மோதும் புதிய வடிவம் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications