IND vs SL பயிற்சி டெஸ்டில் வெறும் 2 பந்தை சந்தித்த உடன் நடையைக் கட்டிய ஜெய்ஸ்வால்.. பெரும் ஏமாற்றம்
கொழும்பு: இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்பாக கொழும்பில் நடைபெற்று வரும் 3 நாள் பயிற்சிப் போட்டியில், இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் ஏமாற்றம் அளித்தார்.
இந்தப் பயிற்சிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணி சார்பில் ரவிந்து ரசாந்தா 71 ரன்களும், நிஷான் மதுஷ்கா 66 ரன்களும், சோனல் தினுஷா 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், விஷ்வா பெர்னாண்டோ வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே, 2-வது பந்தில் திலும் சுதீராவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிக்கொடுத்தார்.
தற்போதைய இந்திய அணியில் உள்ள பல இளம் வீரர்களுக்கு இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை. இதனால் கொழும்பு ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப பேட்டிங் செய்து தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இந்தப் பயிற்சிப் போட்டி ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
ஆனால், ரன் எதுவும் எடுக்காமல் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனதால் இலங்கை மண்ணில் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு பயிற்சி பெறும் வாய்ப்பை அவர் தவறவிட்டுள்ளார். 2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல் தொடர்ந்து ஆடினர். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக இந்த பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கே எல் ராகுல் தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications
