மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை குறித்து வெளியாகி உள்ள ஒரு தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இரண்டு நாட்களில் அவர் 2 கிலோ எடையை இழந்துள்ளார் என்றும், அவருக்கு மருத்துவர்கள் கட்டாய ஓய்வு அளித்துள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அடுத்து வரும் உள்ளூர் போட்டிகளில் ஜெய்ஸ்வால் விளையாட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சையத் முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார் ஜெய்ஸ்வால். புனேவில் நடந்த போட்டியின் போது, அங்குள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட உணவு அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அல்ட்ரா சவுண்ட் மற்றும் எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு "Acute Gastroenteritis" எனப்படும் கடுமையான இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து வெளியான செய்தியில், "ஜெய்ஸ்வால் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் வலி குறைந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு நாட்களில் அவர் 2 கிலோவுக்கும் மேல் எடையை இழந்துவிட்டார். அடுத்த 7 முதல் 10 நாட்களுக்கு முழு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி மும்பை திரும்பியுள்ளார்.
மும்பை அணி வரும் டிசம்பர் 24ம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே ட்ராபியில் சிக்கிம் அணியை எதிர்கொள்கிறது. இதில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஜெய்ஸ்வால் துவக்க வீரராக இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடல்நிலை காரணமாக அவர் முதல் சில போட்டிகளைத் தவறவிட அதிக வாய்ப்புள்ளது. டிசம்பர் 29ம் தேதி சத்தீஸ்கருக்கு எதிரான போட்டியிலாவது அவர் ஆடுவாரா என்பது சந்தேகமே.
ஜனவரி 11, 2026 அன்று நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கும் ஜெய்ஸ்வால், அதற்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவாரா என்பதை பிசிசிஐ மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மைதானத்தில் பவுலர்களை விரட்டி அடிக்கும் ஜெய்ஸ்வால், சீக்கிரம் குணமடைந்து மீண்டும் பேட்டை சுழற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.