புனே: சையத் முஷ்டாக் அலி ட்ராபி டி20 தொடரில் மும்பை அணி பெற்ற திரில் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) புனேவில் நடைபெற்ற சூப்பர் லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். போட்டி முடிந்த பிறகு அவருக்குத் திடீரென கடுமையான வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால், உடனடியாக அவர் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள ஆதித்யா பிர்லா மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், அவருக்குத் தீவிரமான இரைப்பை குடல் அழற்சி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக ஐவி (IV) மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டன. மேலும், அவரது உடல்நிலையைக் கண்காணிக்க அல்ட்ராசவுண்ட் மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சிகிச்சைக்குப் பிறகு, அவர் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொண்டு முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 156 ரன்கள் குவித்து உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த ஜெய்ஸ்வால், தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக நடந்த போட்டியில் ரன் மழை பொழிந்தது. ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 217 ரன்கள் என்ற இமாலய இலக்கை மும்பை அணி விரட்டியது. கேப்டன் அஜிங்க்யா ரஹானே 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்தார். ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றியவர் சர்ஃபராஸ் கான் தான். ருத்ர தாண்டவம் ஆடிய அவர், வெறும் 22 பந்துகளில் 73 ரன்கள் (7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசித் தள்ளினார்.
ஜெய்ஸ்வால் மற்றும் ரஹானே அமைத்த 41 ரன் பார்ட்னர்ஷிப்பிற்குப் பிறகு, ரஹானே - சர்ஃபராஸ் ஜோடி 39 பந்துகளில் 111 ரன்கள் குவித்துத் தெறிக்கவிட்டது. இறுதியில் மும்பை அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு இடையேதான் ஜெய்ஸ்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானது.