பிர்மிங்காம்: இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இன்னும் 97 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மாபெரும் சாதனையைப் படைப்பார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை உருவாக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 52.86 என்ற சராசரியில் 1903 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இன்னும் 97 ரன்கள் எடுத்தால், 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

இந்திய அளவில், டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக (குறைந்த போட்டிகளில்) 2000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 1976-ம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகத் தனது 23-வது டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். தற்போது, சுமார் 49 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே 20 போட்டிகளில் ஆடியுள்ள ஜெய்ஸ்வால், இங்கிலாந்துக்கு எதிரான தனது 21-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் 97 ரன்களை எடுத்துவிட்டால், சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பார்.
அதே சமயம், குறைந்த இன்னிங்ஸ்களில் 2000 டெஸ்ட் ரன்களை எட்டிய இந்திய வீரர்கள் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் முறியடிக்க வாய்ப்புள்ளது. இந்தச் சாதனையை ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக் (40 இன்னிங்ஸ்கள்) கூட்டாக வைத்துள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 38 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே (39-வது இன்னிங்ஸ்) அவர் 97 ரன்களை எடுத்துவிட்டால், டிராவிட் மற்றும் சேவாக்கின் சாதனையை முறியடிப்பார். ஒருவேளை, இரண்டாவது இன்னிங்ஸில் (40-வது இன்னிங்ஸ்) இந்த மைல்கல்லை எட்டினால், அவர்களது சாதனையைச் சமன் செய்வார்.
உலக அளவில், அதிவேகமாக 2000 டெஸ்ட் ரன்களை எட்டிய வீரராக டான் பிராட்மேன் (19 போட்டிகள், 22 இன்னிங்ஸ்கள்) உள்ளார்.
சுனில் கவாஸ்கர் - 23
கவுதம் கம்பீர் - 24
ராகுல் டிராவிட் - 25
வீரேந்தர் சேவாக் - 25
விஜய் ஹசாரே - 26
செதேஷ்வர் புஜாரா - 26
சவுரவ் கங்குலி - 27
ஷிகர் தவான் - 28
எம்.ஏ.கே. பட்டோடி - 28
அஜிங்க்யா ரஹானே - 29