ஜெய்ஸ்வாலுக்கு ரன் அவுட்டே கேட்டு இருக்கக் கூடாது.. இலங்கை பவுலர் செய்த தவறு.. கொதித்த ரசிகர்கள்
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட்டான விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இலங்கை பந்துவீச்சாளர் மோதியதால் ஜெய்ஸ்வால் கீழே விழுந்த நிலையில், தார்மீக அடிப்படையில் இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா அந்த அப்பீலை திரும்பப் பெற்று விளையாட அனுமதித்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய இன்னிங்ஸின் 11வது ஓவரில் கேஷரா நுவந்தா வீசிய பந்தை கே.எல்.ராகுல் தட்டிவிட்டு ரன் எடுக்க வேகமாக ஓடினார். அப்போது பந்தை தடுக்க பாய்ந்த பந்துவீச்சாளர் நுவந்தா, எதிர்முனையில் நின்ற ஜெய்ஸ்வால் மீது எதிர்பாராதவிதமாக பலமாக மோதினார். இதில் நிலைதடுமாறிய ஜெய்ஸ்வால் ஆடுகளத்திலேயே கீழே விழுந்தார். இதைப் பார்த்த ராகுல் பாதியிலேயே நின்றார். பின்னர் சுதாரித்து எழுந்த ஜெய்ஸ்வால் ஒரு அடி எடுத்து வைத்துவிட்டு, உடனடியாக முடிவை மாற்றி மீண்டும் பந்துவீச்சாளர் முனைக்கே திரும்ப முயன்றார். ஆனால் அதற்குள் ராகுலும் வேகமாக ஓடிவந்து அதே முனையை அடைந்ததால், ஜெய்ஸ்வால் ரன் அவுட்டாகும் சூழல் உருவானது.

ஃபீல்டர் பிரபாத் ஜெயசூர்யா பந்தை விக்கெட் கீப்பரிடம் வீசியபோது, கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா உடனடியாக ஸ்டம்புகளை அடித்து ரன் அவுட் செய்யவில்லை. மோதலால் ஜெய்ஸ்வால் கீழே விழுந்ததை கவனித்த அவர், ஸ்லிப்பில் நின்ற கேப்டன் தனஞ்செயா டி சில்வாவிடம் அவுட் செய்யலாமா என சைகை காட்டினார். ஆனால் கேப்டனோ அப்பீலை செய்யுமாறு சைகை காட்டவே, பெயில்ஸ் அகற்றப்பட்டு ஜெய்ஸ்வால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் 37 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் அதிருப்தியுடன் வெளியேறினார்.
பந்துவீச்சாளரின் மோதலே இந்த விக்கெட்டுக்கு முதன்மைக் காரணம் என்பதால், அம்பயர்களும் இலங்கை கேப்டனிடம் அப்பீலை வாபஸ் பெறுகிறீர்களா எனக் கேட்டனர். ஆனால் இலங்கை அணி அப்பீல் செய்வதாகவே கூறியது. கிரிக்கெட் விதிகளின்படி இந்த முடிவு சரியானது என்றாலும், விளையாட்டு தர்மத்தின் அடிப்படையில் இலங்கை கேப்டன் ஜெய்ஸ்வாலை தொடர்ந்து விளையாட விட்டிருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications

