ருதுராஜ்-க்கு திருமணமாம்.. ஜெய்ஸ்வாலை தேடிவந்த அதிர்ஷ்டம்.. இங்கிலாந்து செல்லும் குட்டி கங்குலி!
அகமதாபாத்: சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடக்கவுள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்று தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அணிகளின் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு விராட் கோலி, சிராஜ், அஸ்வின், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் 2வது குழுவினர் இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர். அந்த குழுவுடன் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களும் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கான மாற்று வீரர்களாக சூர்யகுமார் யாதவ், முகேஷ் குமார் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் ருதுராஜ் கெய்க்வாடிற்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ருதுராஜ் கெய்க்வாடிற்கான மாற்று வீரர் ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இந்திய அணியுடன் இங்கிலாந்திற்கு புறப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸில் 625 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஈர்த்துள்ளார். இதனால் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்திய டெஸ்ட் அணிக்கான மாற்று வீரராக தேர்வாகியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications