“ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் செய்தாலும் இந்திய அணியில் இடம்..”.. வார்னிங் விட்ட வாசிம் ஜாஃபர்
மும்பை: இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுத்து வருவதை இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பிடிப்பதற்கான மோசமான முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார்.
2026-27 ரஞ்சி கோப்பை தொடருக்கு முன்னதாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் செய்ய தீவிர பயிற்சி மேற்கொண்ட தகவல்கள் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பேசிய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், "ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் செய்வதைக் கேட்டு நானே மிகவும் ஆச்சரியப்பட்டேன். இது ஒரு விளையாட்டான விஷயமாகவே எனக்குத் தோன்றுகிறது. சிறுவயதிலிருந்தே கீப்பிங் செய்த பழக்கம் இல்லை என்றால், இந்த கடினமான பணியை உடனடியாகக் கற்றுக்கொள்வது மிகவும் கடினம். மிகக் குறுகிய காலத்தில் இந்தத் திறமையை யாராலும் வளர்த்துக் கொள்ள முடியாது.

ஒருவேளை அவர் விக்கெட் கீப்பிங் செய்தாலும் இந்திய அணியில் எங்கே இடம் இருக்கிறது? ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் என ஏற்கனவே சிறந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையாக உள்ளனர். ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற மோசமான முயற்சியாகவே இதை நான் பார்க்கிறேன்.
ரஞ்சி கோப்பை தொடரும், அடுத்து வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரும் மிக முக்கியமானவை. எனவே தேவையில்லாத பரிசோதனைகளில் ஈடுபடாமல் தனது பேட்டிங்கில் மட்டுமே ஜெய்ஸ்வால் முழுக் கவனம் செலுத்த வேண்டும்" என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்தார்.
ராகுல் டிராவிட், ஏபி டி வில்லியர்ஸ் போன்ற வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் இடையில் விக்கெட் கீப்பிங் செய்த போதும், அவர்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே கீப்பிங் செய்த அனுபவம் இருந்தது என்பதை வாசிம் ஜாஃபர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெய்ஸ்வால் செய்யும் இந்த முயற்சி சரியா? தவறா? என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியிலும் சூடு பிடித்து உள்ளது.


Click it and Unblock the Notifications

