இந்திய ODI, டி20 அணியில் இடம் கொடுக்க மறுப்பதால் விக்கெட் கீப்பராக மாறும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பேட்டிங் மற்றும் லெக் ஸ்பின்னைத் தாண்டி தற்போது தீவிரமாக விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026-27 ரஞ்சி கோப்பை சீசனுக்கு முன்னதாக, மும்பை அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் கையுறைகளை அணிந்து பந்துகளைப் பிடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவின. மேலும் பயிற்சி போட்டி ஒன்றில் அவர் சுமார் 10 ஓவர்கள் முழுமையாக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார்.

இதுகுறித்து மும்பை ரஞ்சி கேப்டன் சித்தேஷ் லாட் பேசுகையில், "ஜெய்ஸ்வால் தனது ஆட்டத்தில் புதிய திறமைகளைச் சேர்க்க விரும்புகிறார். அதனால்தான் தற்போது விக்கெட் கீப்பிங் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இதன் பின்னணியில் அவரது எதிர்காலத் திட்டம் என்னவென்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் தீவிரமாகப் பயிற்சி எடுத்து வருகிறார். தொடர்ந்து பயிற்சி செய்தால் அவர் விக்கெட் கீப்பிங்கிலும் சிறந்த வீரராக மாறிவிடுவார்" என்று சித்தேஷ் லாட் தெரிவித்தார்.
24 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணியின் அதிரடி பேட்டராக மட்டுமின்றி அவ்வப்போது லெக் ஸ்பின்னும் வீசக்கூடியவர். தற்போது விக்கெட் கீப்பிங் திறனையும் வளர்த்துக்கொள்வது எதிர்காலத்தில் இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்யத் தான் எனவும் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
தற்போது இந்திய ஒருநாள் அணியிலும், டி20 அணியிலும் ஜெய்ஸ்வாலுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ரோஹித் சர்மா ஒருநாள் அணியிலும், சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி டி20 அணியிலும் ஜெய்ஸ்வாலுக்கு போட்டியாக தொடக்க வீரர் இடத்தில் ஆடி வருகின்றனர். இந்த நிலையில், ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் செய்வதன் மூலம் மாற்று விக்கெட் கீப்பர் என்ற அடையாளத்துடன் இந்திய அணியில் கூடுதல் வாய்ப்புகளை பெற முயற்சி செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் அக்டோபர் 11-ஆம் தேதி வான்கடே மைதானத்தில் சண்டிகர் அணிக்கு எதிராகத் தொடங்கும் முதல் ரஞ்சி போட்டியில் ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காக விளையாடுகிறார். அதன்பின் அக்டோபர் 16-ஆம் தேதி நியூசிலாந்து செல்லும் இந்தியா ஏ அணியுடன் அவர் இணைகிறார். அங்கு 3 முதல்தர டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்டு, நவம்பர் 19-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகத் தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார்.


Click it and Unblock the Notifications

