விராட் கோலி டூ விராட் கோலி 2.0.. 2022ம் ஆண்டில் நடந்த மெகா கம்பேக்.. நமது ‘கிங்’ கடந்து வந்த பாதை!!
சென்னை: 2022ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டிலேயே மிகப்பெரிய தாக்கமும், கம்பேக்-ம் கொடுத்தவர்கள் பட்டியலை எடுத்துப்பார்த்தால் விராட் கோலியின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும்.
"The Kings is Back" என்ற வார்த்தை கடந்த 2 ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் இல்லாமல் இருந்ததை பார்த்திருப்போம். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்துக்கொடுத்தது போல கடந்த 4 மாதங்களாக அந்த வார்த்தை தான் அடிக்கடி இடம்பெற்று வருகிறது.
2022ம் ஆண்டின் தொடக்கம் விராட் கோலிக்கு மிகவும் மோசமாக அமைந்திருந்தது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி போனது மட்டுமின்றி வெற்றிகரமாக இருந்த டெஸ்ட் கேப்டன்சியும் அவரிடம் இருந்து பறிபோனது.

கடினமான நாட்கள்
இனி எந்தவித அழுத்தமும் இன்றி ஒரு பேட்ஸ்மேனாகவாது கலக்குவார் என்று எதிர்பார்த்த போது, தொடர்ச்சியாக அதில் சொதப்பல்களே மிஞ்சின. இதனால் விராட் கோலியின் கதை முடிந்தது, அவரை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறமும், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி அழுத்தம் கொடுத்தது மறுபுறமும் என விராட் கோலி சிக்கி தவித்தார்.

வேதனை பதிவு
"நான் நன்றாக கவனம் செலுத்தி விளையாடுகிறேன் என நானே ஏமாற்றிக்கொண்டேன், என் வாழ்நாளில் ஒரு மாதம் முழுவதும் பேட்டை கையில் எடுக்காமல் இருந்தது இதுவே முதல்முறை.. அந்த அளவிற்கு என்னை நானே தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்தேன், சமூகத்தில் இருந்து தள்ளியே இருக்க விரும்பினேன்" அணியில் இருந்து நீண்ட ஓய்வு எடுத்துக்கொண்ட போது விராட் கோலி பேசிய வார்த்தைகள் இது.

அட்டகாச கம்பேக்
இந்த ஓய்வுக்கு பிறகு தான் 2022ம் ஆண்டு தனக்கு முடிவில்லை, புதிய தொடக்கம் என காட்டினார். ஆசிய கோப்பையில் அணிக்கு திரும்பிய கோலி, முதல் போட்டியில் 30 ரன்களுக்கு மேல் அடித்த நிலையில், ஹாங்காங் அணிக்கு எதிரான 2வது போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் பின்னர் பாகிஸ்தான் & இலங்கை அணிகளுடன் சற்று சொதப்பினாலும், ஆஃப்கானுக்கு எதிராக மெகா கம்பேக் கொடுத்தார்.

காத்திருப்புக்கு முடிவு
கடைசி லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஓப்பனராக களமிறங்கிய விராட் கோலி, அதிரடியாக சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசி அசத்தினார். 61 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 122 ரன்களை குவித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கோலி அடிக்கும் முதல் சதம் இதுதான் ஆகும். கடைசியாக 2019ம் ஆண்டு சதமடித்திருந்த அவர், 1000 நாட்கள் காத்திருப்புக்கு முடிவு கட்டினார்.

அடுத்த திட்டம்
இதில் தொடங்கியது தான் விராட் கோலியின் 2.0 பயணம், அதன் பிறகு டி20 உலகக்கோப்பையிலும் தனது வேகத்தை காட்டினார். அதில் விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் அமைத்த பார்ட்னர்ஷிப்கள் இந்திய ரசிகர்களை கவர்ந்தது. 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையும் வரவிருப்பதால், அதில் நிச்சயம் கோலியின் அட்டகாசத்தை பார்ப்போம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications