பாய்ஸ்….!! உலக கோப்பையோட ஊருக்கு வரணும்..!! இந்திய அணியை வாழ்த்திய அந்த இளம் வீரர்
மும்பை: 2019ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா கைப்பற்ற வாழ்த்துகள் என்று இளம் வீரர் ரிஷப் பன்ட் கூறியுள்ளார்.
இன்னும் ஒரே நாள் பாக்கி... கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர் துவங்க. பயிற்சி ஆட்டங்களில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தோற்கும் என்று கணிக்கப்பட்ட அணிகள் ஜெயிக்கின்றன. வெற்றி பெறும் என்று யூகிக்கப்பட்ட அணிகள் தோல்வியை சந்தித்து இருக்கின்றன. அந்த வகையில் முதல் பயிற்சி ஆட்டத்தில் தோற்ற இந்தியா, 2வது ஆட்டத்தில் வங்கதேசத்தை, பங்கம் செய்து வெற்றியை ருசித்திருக்கிறது.

மிரள வைத்த தோனி
வயசானாலும் உன் இளமையும், ஸ்டைலும் மாறவேயில்லை என்ற சினிமா வசனத்தை நினைவுபடுத்துவது போல இருந்தது தல தோனியின் ஆட்டம். யாரும் எதிர்பார்க்காத வகையில் சதம் அடித்து மிரள வைத்தார். அணியும் வெற்றி பெற்றது.
கலக்கிய ராகுல்
முதல் பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, இந்த ஆட்டத்தின் மூலம் பார்முக்கு மீண்டு வந்திருக்கிறது. அணியில் எதிர்பார்த்த இளம் வீரர் ராகுல் சதமடித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். இந்நிலையில், மற்றொரு இளம் வீரரான ரிஷப் பன்ட் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவுக்கு வாழ்த்து
தோனி, ராகுல் ஆட்டத்தை பார்த்த பின்பு டுவிட்டர் வழியாக இந்த வாழ்த்தை அவர் கூறியிருக்கிறார். அதில் ரிஷப் பன்ட் கூறியிருப்பதாவது: தாய் நாட்டுக்காக விளையாடும் உணர்வுக்கு இணையாக வேறு எந்த உணர்வும் நெருங்க கூட முடியாது. இதே வேகத்தில் சென்று கோப்பையை கொண்டு வர வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

குவியும் பாராட்டு
உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் பன்ட் சேர்க்கப்பட வில்லை. அவரின் புறக்கணிப்பு குறித்து பல முன்னாள் வீரர்களே கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த சூழ்நிலையில் அணியின் வெற்றிக்கு அவர் தெரிவித்த வாழ்த்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications