மும்பை : இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வெற்றிகளில் எல்லாம் தவிர்க்க முடியாதவராக இருந்தவர் யுவராஜ் சிங். அவர் 2003இல் உள்ளூர் போட்டி ஒன்றில் ஸ்ரீசாந்தை பார்த்து அப்போதே அவரைப் பற்றி தன் கணிப்பை கூறி இருக்கிறார்.
20 வயது ஸ்ரீசாந்த்தை அழைத்து அப்போதே அறிவுரை கூறி இருக்கிறார் யுவராஜ் சிங். அது பற்றி ஸ்ரீசாந்த் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
2003இல் கர்நாடகா மாநில கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்துள்ளது. அதில் இந்தியன் ஏர்லைன்ஸ் சார்பில் 20 வயதே ஆன ஸ்ரீசாந்த் ஆடி இருக்கிறார். அப்போது அந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர்களான விவிஎஸ் லக்ஷ்மன், யுவராஜ் சிங் போன்றோரும் ஆடினர்.

எதிரணியை சேர்ந்த ஸ்ரீசாந்த் பந்து வீசுவதை ஸ்லிப் பீல்டிங்கில் நின்று பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார் யுவராஜ் சிங். போட்டி முடிந்த உடன் ஸ்ரீசாந்த் இந்திய அணி வீரர் என்பதால் யுவராஜ் சிங் என்ன செய்கிறார் என பார்த்துக் கொண்டு நின்று இருக்கிறார். அப்போது அவரை அழைத்த யுவராஜ் சிங், இந்த பார்ட்டி, கொண்டாட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டு கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்து. இன்னும் 2 - 3 ஆண்டுகளில் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என கூறி இருக்கிறார்.
யுவராஜ் சிங் கணித்ததை போலவே ஸ்ரீசாந்த் அடுத்த மூன்று ஆண்டுகள் கழித்து இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்த சம்பவங்களை விவரித்த ஸ்ரீசாந்த் யுவராஜ் சிங் போன்ற இந்திய அணி வீரர் தன்னிடம் இப்படி அழைத்து அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவர் என் பந்துவீச்சை கவனித்து 20 வயதே ஆன தனக்கு அறிவுரை கூறினார். இதை மிகச் சில வீரர்களே செய்வார்கள். ஆனால், யுவராஜ் சிங் என்னிடம் நீ இந்திய அணிக்கு ஆடுவாய் என அப்போதே கூறினார் என நெகிழ்ந்து இருக்கிறார்.
2005இல் இந்திய அணியில் இடம் பெற்ற ஸ்ரீசாந்த், துவக்கத்தில் நல்ல வேகப் பந்துவீச்சாளராக அறியப்பட்டார். "விக்கெட் வேண்டுமா? ஸ்ரீசாந்தை அழையுங்கள்" என்று கூறும் அளவுக்கு முதல் சில ஆண்டுகள் அவரது ஆட்டம் இருந்தது. ஆனாலும், அவரது ஆக்ரோஷமான குணம் அவரது பல சறுக்கல்களுக்கு காரணமாகவும் அமைந்தது.