
சூர்யகுமாரின் சொதப்பல்
உலகின் நம்.1 டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 1,675 ரன்களை குவித்துள்ளார். அதுவும் 175 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3 சதங்களை அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரால் சோபிக்க முடியவில்லை. சராசரியாக 25 ரன்களை மட்டுமே அடிக்கிறார். அதுவும் கடைசி 14 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதத்தை கூட அடிக்காமல் இருக்கிறார். இதில் 3 கோல்டன் டக் அவுட்டும் சேர்ந்துள்ளது.

விமர்சனங்கள்
டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவால் ஒருநாள் கிரிக்கெட்டை சமாளிக்க முடியவில்லை. அவருக்கு இது செட்டாகாது என்பதால் தான் சொதப்பி வருகிறார். எனவே அவரை இனி அணியில் சேர்க்க வேண்டாம் என்றும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனவும் ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

யுவ்ராஜ் ஆதரவு
இந்நிலையில் சூர்யகுமாருக்காக யுவ்ராஜ் சிங் ஆதரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர்,
விளையாட்டுத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற தாழ்வுகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அதனை கடந்து தான் செல்ல வேண்டும். நாங்கள் அனைவருமே இது போன்ற ஒரு மோசமான புள்ளிகளை ஏதோ ஒரு தருணத்தில் அனுபவித்துள்ளோம். எனவே சூரியகுமார் யாதவை விமர்சிக்க வேண்டாம். எனக்கூறியுள்ளார்.

துருப்புச்சீட்டு
தொடர்ந்து பேசிய அவர், இந்திய அணியின் மிக முக்கிய துருப்புச்சீட்டாக சூர்யகுமார் யாதவ் தான் இருப்பார். அதனை நான் உறுதியாக நம்புகிறேன். இந்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் அதற்கு சூர்யகுமார் யாதவ் தான் உதவக்கூடியவராக இருப்பார்.சூர்யா மீண்டும் உதயமாவார் என யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார்.

வாய்ப்பு உறுதி
இதுஒருபுறம் இருக்க, சூர்யகுமாருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தியாவுக்காக வழக்கமாக நம்.4வது இடத்தில் ஆடக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதால் மீண்டும் அணிக்கு திரும்ப 4 - 5 மாதங்கள் வரை ஆகலாம். எனவே அவர் வரும் வரை நம்பிக்கையாக இருக்கக்கூடிய ஒரே ஒரு வீரர் சூர்யகுமார் யாதவ்.


Click it and Unblock the Notifications











