மும்பை: உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங்குக்கு முடி வெட்டி விட்ட பிரபல சிகை அலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கிம், அவரது புருவத்தில் இருந்து தலைக்கு பைபாஸ் ரோடு போட்டு இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் முன்னணி சிகை அலங்கார நிபுணரான மும்பையை சேர்ந்த ஆலிம் ஹக்கிம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரின் ஆஸ்தான ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இருக்கிறார். பாலிவுட் நடிகர்கள் பலரும் கூட அவரின் வாடிக்கையாளர்கள் தான்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, தோனி ஆகியோர் இவரின் கை வண்ணத்தால் தான் தங்களின் சிகை அலங்காரத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். விசித்திரமான பல டிசைன்களை அவர்கள் தலையில் செய்து பார்த்து விளையாடுவது ஆலிம்-மின் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் யுவராஜ் சிங் ஆலிம் ஹக்கிமிடம் சிக்கி இருக்கிறார். யுவராஜ் சிங் அதிக முடி வைத்திருந்த நிலையில், நடுவில் குடுமியைப் போட்டு விட்டு, சுற்றிலும் ரோடு போடுவது போல ஒரு டிசைனை செய்து இருக்கிறார் ஆலிம் ஹக்கிம். அந்த ரோடு யுவராஜ் சிங்கின் புருவத்தில் இருந்தே தொடங்குகிறது. இதை ரசிகர்கள் பலர் பைபாஸ் சாலை என கிண்டல் செய்து வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் தோனி நீண்ட முடியுடன் காட்சி அளித்து ரசிகர்களை அவரது இளமைக் காலத்துக்கு அழைத்துச் சென்றதன் பின்னணியிலும் இதே ஆலிம் ஹக்கிம் தான் இருக்கிறார். சுமார் ஓராண்டு காலம் தோனியின் தலை முடியை பாராமரித்து அந்த ஸ்டைலை கொண்டு வந்தார். சில சமயம் பாராட்டுக்களை பெறும் ஆலிம், பல சமயம் கிண்டல் செய்யப்பட்டும் வருகிறார்.
சில வாரங்கள் முன்பு உலக லெஜன்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட யுவராஜ் சிங் அந்த அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். அடுத்து அவர் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட போவதாக சில வதந்திகள் உலா வந்து கொண்டு இருக்கின்றன.