சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கை உலகத்தரம் வாய்ந்த வீரராக மாற்றியதில் அவருடைய தந்தை யோக்ராஜ் சிங்கிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், அதற்காக அவர் கையாண்ட வழிமுறைகள் மிகவும் கடுமையானவை. சிறுவயதில் யுவராஜ் சிங்கை அவர் நடத்திய விதம் குறித்துப் பலரும் விமர்சித்தாலும், ஒரு தந்தையாகவும் பயிற்சியாளராகவும் தான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்பது குறித்து யோக்ராஜ் சிங் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கை பாதியிலேயே முடிந்து போனது யோக்ராஜ் சிங்கிற்குத் தாங்க முடியாத மன வருத்தத்தை அளித்தது. இது குறித்துப் பேசிய அவர், "ஒருநாள் இரவு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. வாழ்க்கை முடிந்துவிட்டதோ என்ற விரக்தி ஏற்பட்டது. அப்போது கைக்குழந்தையாக இருந்த யுவராஜ் சிங்கை தூக்கிக்கொண்டு, சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் முன்பு வைத்தேன்.

அப்போது கடவுளிடம், 'ஒன்று என் உயிரை எடுத்துக்கொள், இல்லையென்றால் இவனுக்கு நல்ல ஆசியை கொடு' என்று அழுது கொண்டே வேண்டினேன். நான் ஒரு தோல்வியடைந்தவனாக இந்த உலகத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை. என் மகன் மூலம் சாதிக்க நினைத்தேன்" என்று அந்த உணர்ச்சிகரமான தருணத்தை நினைவு கூர்ந்தார்.
யுவராஜ் சிங் சிறு வயதிலேயே அபார ஆற்றல் கொண்டவராக இருந்துள்ளார். அவருக்கு ஒன்றரை வயது இருக்கும்போது, யோக்ராஜ் ஒரு பிளாஸ்டிக் மட்டையை விளையாடக் கொடுத்துள்ளார். அப்போது யுவராஜ் பந்தை அடித்த வேகத்தில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்துவிட்டதாம். நடைபழகும் வயதிலேயே அவரிடம் இருந்த அந்த வேகத்தைப் பார்த்து யோக்ராஜ் சிங் ஆச்சரியமடைந்துள்ளார். அப்போதே இவன் ஒரு பிறவி கிரிக்கெட் வீரன் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
வளர வளர யுவராஜ் சிங்கிற்கு ஸ்கேட்டிங் மற்றும் டென்னிஸ் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரித்தது. ஆனால், கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வாளர்கள் தன் மீது காட்டிய அலட்சியத்திற்கு, தனது மகன் மூலம் பழிவாங்க வேண்டும் என்று யோக்ராஜ் துடித்தார். கபில் தேவ் போன்றவர்களுடன் விளையாடிய தனக்கு அணியில் போதிய வாய்ப்பு கிடைக்காததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
ஒருமுறை ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற பதக்கங்களுடன் யுவராஜ் வந்தபோது, கோபமடைந்த யோக்ராஜ் அந்த பதக்கங்களையும், ஸ்கேட்டிங் காலணிகளையும் காரிலிருந்து வெளியே தூக்கி வீசியுள்ளார். 5 வயது சிறுவனாக இருந்த யுவராஜ் அழுதபோது, அவரை அமைதியாக இருக்குமாறு மிரட்டியுள்ளார். இது தவறு என்று தெரிந்தாலும், தனது மகனை கிரிக்கெட் பக்கம் திருப்பவே அப்படி செய்ததாகக் கூறுகிறார்.
யோக்ராஜ் சிங்கின் இந்த கடுமையான நடவடிக்கைகளால் வீட்டில் பெரும் பிரச்சனை வெடித்தது. யுவராஜை இப்படிக் கொடுமைப்படுத்துவதற்கு நீங்கள் இறந்துபோவதே மேல் என்று யோகராஜின் தாயார் திட்டியுள்ளார். வீட்டை விட்டு வெளியேறும்படியும் கூறியுள்ளார். ஆனால், எதற்கும் செவிசாய்க்காத அவர், தனது மகனை கிரிக்கெட் வீரராக மாற்றுவதிலேயே குறியாக இருந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் நாட்டிற்காக விளையாடி, இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஒரு வீரராக யுவராஜ் சிங் ஜொலிப்பதற்கு, அன்று தான் கொடுத்த அந்த கடுமையான பயிற்சிகளே காரணம் என்று யோக்ராஜ் சிங் கூறியுள்ளார். ஒரு சாம்பியனை உருவாக்க இப்படித்தான் கடினமாக இருக்க வேண்டும் என்பது அவரது வாதமாக உள்ளது.