சென்னை : - இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இக்கட்டான நிலையில் டக் அவுட் ஆகி அணியை கைவிட்டார்.
அவரது மோசமான ஆட்டத்தை கண்ட முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களுக்கு சுருட்டி வீசிய இந்திய அணி இந்தப் போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என்ற எண்ணம் இருந்தது.
ஆனால், துவக்க வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார்கள். துவக்க வீரர்கள டக் அவுட் ஆவது சகஜம் தான் என்றாலும், இரண்டு பேருமே டக் அவுட் ஆனது பெரும் அதிர்ச்சியை அளித்தது.
அடுத்து விராட் கோலி ஒருபுறம் நிற்க, ஸ்ரேயாஸ் ஐயர் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து அவரும் டக் அவுட் ஆனார். இது இந்தியாவிற்கு பேரிடியாக அமைந்தது. 2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி பரிதாபமாக காட்சி அளித்தது.
அப்போது யுவராஜ் சிங் ட்விட்டரில் கடும் விமர்சனத்தை முன் வைத்தார். அவர் முன்பிருந்தே நான்காம் வரிசையில் கே எல் ராகுலை ஆட வைக்க வேண்டும் என கூறி வருகிறார். ஆனால், இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரை தான் அந்த இடத்தில் ஆட வைத்து வருகிறது.

யுவராஜ் சிங் இது குறித்து தன் பதிவில், "நான்காம் வரிசை பேட்ஸ்மேன் அழுத்தத்தை தாங்க வேண்டும். அணி ஒரு வீழ்ச்சியில் இருந்து எழுந்து மீண்டும் இன்னிங்க்சை ஆடும் போது இதை விட சிறப்பான யோசனை இருக்க வேண்டும்" என ஸ்ரேயாஸ் ஐயர் பெயரை குறிப்பிட்டு விமர்சித்து இருக்கிறார்.
மேலும், "கே எல் ராகுல் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான்காம் வரிசையில் இறங்கி சதம் அடித்த பிறகும் அவரை ஏன் அந்த இடத்தில் தொடர்ந்து ஆட அனுமதிக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை." என இந்திய அணி நிர்வாகத்தையும் விமர்சனம் செய்துள்ளார் யுவராஜ் சிங்.
யுவராஜ் சிங் நான்காம் வரிசையில் பேட்டிங் இறங்கி பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்று இருக்கிறார். அதன் காரணமாகவே அவர் நான்காம் வரிசையில் எந்த வீரர் இறங்கலாம் என்பது குறித்து தனது கருத்தை அழுத்தமாக கூறி இருக்கிறார்.