7 வருஷமாக சன்ரைசர்ஸ் அணியில் ஆடுகிறார் ஆனால் கேப்டன் பதவி கொடுக்க மாட்டீங்களா? யுவராஜ் விமர்சனம்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதால், இந்த சீசனில் ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன்பாக அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இஷான் கிஷனுக்கு பதிலாக இளம் வீரர் அபிஷேக் சர்மாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். சுமார் 7 ஆண்டுகளாக ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் அபிஷேக் சர்மாவுக்கு அந்த அணியின் கலாச்சாரம் மற்றும் தன்மை குறித்து நன்கு தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்பகாலம் முதலே அபிஷேக் சர்மாவுக்கு வழிகாட்டியாக இருந்து வரும் யுவராஜ், உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக கேப்டன்சி செய்துள்ளதையும் நினைவு கூர்ந்தார்.

சுப்மன் கில் போன்ற இளம் தலைவர்களை உருவாக்குவது போல அபிஷேக் சர்மாவையும் கேப்டனாக உருவாக்க வேண்டும் என அவர் அணி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார். இத்தனை ஆண்டுகள் அணியில் முக்கிய வீரராக இருந்தும் அவருக்கு இன்னும் கேப்டன் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டாலும், அபிஷேக் சர்மாவின் சமீபத்திய ஃபார்ம் சற்று கவலையளிப்பதாகவே உள்ளது. 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் 8 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 141 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 17.71 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 140.88 ஆகவும் இருந்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் அடித்த 55 ரன்கள் மட்டுமே அந்த தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் சில போட்டிகளில் நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற அவர் தவறினார். மேலும் 3 முறை அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். எனவே கேப்டன்சி விவாதங்களுக்கு மத்தியில், அபிஷேக் சர்மா மீண்டும் தனது அதிரடி ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications