12 பந்து சாதனையை சமன் செய்த கிறிஸ் கெயில் மீது யுவராஜ் சிங்கிற்கு அதிருப்தியாம்
டெல்லி: 12 பந்துகளில் அரை சதம் விளாசிய தனது சாதனையை கிறிஸ் கெயில் சமன் செய்துள்ளது, தனக்கு அதிருப்திதான் என்று கூறியுள்ள இந்திய வீரர் யுவராஜ்சிங், அவர் அதை முறியடிப்பார் என்று எதிர்பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான பிக்பாஷில் மே.இ.தீவுகளின் கிறிஸ் கெயிலும் ஆடி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் கெயில் அணியான மெல்போர்ன் மற்றும் அடிலெய்டு அணிகள் மோதின.
இப்போட்டியில், கிறிஸ் கெயில் 12 பந்துகளில் அரை சதம் கடந்தார். மொத்தம் 17 பந்துகளில் கெயில் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 7 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் இந்திய வீரர் யுவராஜ்சிங் படைத்த அச்சாதனையை கெயில் சமன் செய்தார்.

உலக கோப்பையில் சாதனை
யுவராஜ்சிங் கடந்த 2007ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற, டி20 உலக கோப்பை போட்டியில், 12 பந்துகளில் அரை சதம் விளாசி அதிவிரைவாக அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
அதிருப்தி
யுவராஜ்சிங்கின் சாதனையை கெயில் சமன் செய்துள்ளது குறித்து, யுவராஜ்சிங் தனது டிவிட்டர் கணக்கில் கூறியுள்ளாதாவது: கெயில் எனது சாதனையை முறியடிக்காமல் சமன் செய்தது அதிருப்திதான். 10 பந்துகளில் அரை சதம் விளாசி, கெயில் அல்லது டிவில்லியர்ஸ் தனது சாதனையை முறியடிப்பார்கள் என நம்புவதாக கூறியுள்ளார்.

டிவில்லியர்ஸ் ஏன்
டிவில்லியர்சை இதில் யுவராஜ் கோர்த்துவிட காரணம், கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியொன்றில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 31 பந்துகளில் டிவில்லியர்ஸ் சதம் அடித்ததுதான். சர்வதேச அளவில், கெயில், டிவில்லியர்ஸ் இருவருமே அசாதாரண அதிரடி வீரர்களாக ரசிகர்களால் புகழப்படுகிறார்கள்.

ஆஸி. செல்லும் யூவி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் ஆட உள்ள இந்திய அணியில், யுவராஜ்சிங் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 22ம் தேதி ஆஸ்திரேலியா கிளம்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications